அமீரக சட்டங்கள்

UAE: புதிய தொழிலாளர் சட்டத்தின்படி ‘OVERTIME’ நேரம் மற்றும் ஊதியம் எவ்வாறு கணக்கிடப்படும்..? சட்டம் கூறுவது என்ன..?

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் நீங்கள் உங்களின் நிறுவன முதலாளிகளால் கூடுதல் நேரம் வேலை செய்யும்படி கேட்கப்படுகிறீர்களா..? எவ்வளவு நேரம் கூடுதலாக வேலை செய்ய உங்களை கேட்க முடியும்..? புதிய தொழிலாளர் சட்டம் கூறுவது என்ன..? என்பது பற்றிய தெளிவான தகவல்களை இங்கே காண்போம்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் நடைமுறைக்கு வரவுள்ள, தனியார் துறையில் பணிபுரியும் தொழிலாளர் உறவுகளை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய தொழிலாளர் சட்டம் – ஃபெடரல் ஆணை – சட்டம் எண். 33 – ஆர்டிகிள் 19 ஆனது, ஒரு தனியார் துறை நிறுவனத்தில் பணிபுரிய கூடிய தொழிலாளர்களுக்கு கூடுதல் வேலை நேரம் எவ்வாறு கணக்கிடப்படும் மற்றும் அதற்கான ஊதியம் எவ்வளவு என்பது பற்றிய விரிவான விதிமுறைகளைக் கொண்டுள்ளது.

இருப்பினும், தனியார் துறையில் உள்ள அனைத்து ஊழியரும் கூடுதல் நேர ஊதியத்தை கோர முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த சட்டத்தின் ஆர்டிகிள் 20 ன் கூற்றுப்படி, தனியார் துறையில் சில குறிப்பிட்ட தொழில் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதையும் இந்த சட்டம் உள்ளடக்கியுள்ளது. இந்த வகை பிரிவுகளை சார்ந்த தொழில்கள் பிற்காலத்தில் அறிவிக்கப்படும் நிர்வாக விதிமுறைகளால் தீர்மானிக்கப்படும் எனவும் சட்டம் கூறுகிறது.

ஆர்டிகிள் 19 – கூடுதல் வேலை நேரம் மற்றும் ஊதியம்

1. ஒரு தனியார் நிறுவன முதலாளி தன் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு தொழிலாளியை, ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு மணிநேரம் கூடுதல் வேலை நேரத்திற்கு பணியமர்த்தலாம், மேலும் இந்த சட்ட ஆணையின் நிர்வாக ஒழுங்குமுறைகள் மூலம் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, தொழிலாளி அத்தகைய மணிநேரத்திற்கு மேல் வேலை செய்யக்கூடாது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளியின் மொத்த வேலை நேரம் (கூடுதல் வேலை நேரம் உட்பட) மூன்று வாரங்களில் 144 மணிநேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2. பணிச்சூழலினால், ஒரு தொழிலாளி சாதாரண வேலை நேரத்தை விட அதிக மணிநேரம் பணியமர்த்தப்பட்டிருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தால், அத்தகைய நீட்டிக்கப்பட்ட நேரம் கூடுதல் வேலை நேரமாகக் கருதப்படும். இத்தகைய சூழலில் அந்த தொழிலாளிக்கு, சாதாரண வேலை நேரத்திற்கான (8 மணி நேரம்) அடிப்படை ஊதியம் மற்றும் கூடுதல் வேலை நேரத்திற்காக (2 மணிநேரம்) அடிப்படை ஊதியத்தில் குறைந்தபட்சம் 25 சதவீதம் ஊதியமாக வழங்கப்படும்.

3. பணிச்சூழலினால், ஒரு தொழிலாளி சாதாரண வேலை நேரம் தவிர்த்து, இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கூடுதல் மணிநேரம் பணியமர்த்தப்பட வேண்டும் என்ற தேவை இருந்தால், அந்த தொழிலாளிக்கு சாதாரண வேலை நேரத்திற்கான (8 மணி நேரம்) அடிப்படை ஊதியத்துடன் கூடுதலாக அடிப்படை ஊதியத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதம் கூடுதல் வேலை நேர ஊதியமாக வழங்கப்படும். (இது ஷிப்ட் முறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குப் பொருந்தாது)

4. பணிச்சூழலினால், ஒரு தொழிலாளி விடுமுறை நாளில் பணியமர்த்தப்பட வேண்டும் என்று தேவை இருந்தால், அந்த தொழிலாளிக்கு அதற்கு ஈடாக ஒரு மாற்று விடுமுறை நாள் வழங்கப்படும் அல்லது அவரது சாதாரண வேலை நேரத்திற்கான அடிப்படை ஊதியத்துடன் கூடுதலாக அந்த ஊதியத்தில் குறைந்தபட்சம் 50 சதவிகிதம் சேர்த்து ஒன்றறை நாள் ஊதியம் வழங்கப்படும்.

5. தினசரி வேலை செய்யும் தொழிலாளிகளை தவிர மற்ற தொழிலாளிகள், இரண்டு தொடர்ச்சியான வார இறுதி நாட்களுக்கு மேல் பணியமர்த்தப்படக்கூடாது. (அதாவது ஒரு மாதத்தில் உள்ள நான்கு வார இறுதி நாட்களில் ஒரு தொழிலாளி பணியமர்த்தப்பட வேண்டும் என்றால் அந்த தொழிலாளியை தொடர்ச்சியாக இரு வார இறுதி நாட்கள் மட்டுமே பணியமர்த்த முடியும்)

ஆர்டிகிள் 20 – விலக்கு அளிக்கப்படும் தொழிலாளர்கள் பிரிவுகள்

புதிய தொழிலாளர் சட்டத்தின் ஃபெடரல் ஆணை – சட்டம் எண். 33 – ஆர்டிகிள் 20 ன் படி, இங்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள வேலை நேரம் தொடர்பான விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படவுள்ள தொழிலாளர்களின் பிரிவுகளை இந்த சட்டத்தின் நிர்வாக ஒழுங்குமுறைகள் பின்வரும் நாட்களில் தீர்மானிக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!