ஓமான் : கொரோனாவிற்கான தேசிய கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டம்..!! நாளை முதல் தொடங்கும் என அறிவிப்பு..!!

ஓமானில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கான தேசிய கணக்கெடுப்பின் (National Serological Survey) இரண்டாம் கட்டம் நாளை (ஆகஸ்ட் 16) முதல் தொடங்கப்பட இருப்பதாக ஓமான் நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த ஜூலை மாதம் 12 ம் தேதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் முதல் கட்ட தேசிய கணக்கெடுப்பானது சுகாதார அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த தேசிய அளவிலான கணக்கெடுப்பானது நான்கு சுழற்சிகளாக நடத்தப்படும் என்றும் ஒவ்வொரு கட்டத்திலும் ஐந்து நாட்களுக்கு கணக்கெடுப்பானது மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் கட்ட கணக்கெடுப்பிற்கும் அடுத்த கட்ட கணக்கெடுப்பிற்கும் இடையில் இரு வாரங்கள் முதல் 10 வாரங்கள் வரை இடைவெளி விடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முதல் கட்டத்தில் தேசிய அளவிலான கணக்கெடுப்பை மேற்கொண்ட அணிகள் எதிர்கொண்ட சவால்கள் சமாளிக்கப்பட்டதாகவும், மேலும் திட்டமிடப்பட்ட வழியில் கணக்கெடுப்பு செயல்முறை சீராக தொடர்கிறது என்பதை உறுதிப்படுத்த பயனுள்ள தீர்வுகள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், முதல் கட்டத்திற்கு தேவையான அளவில், மாதிரிகளை சேகரிக்கப்பட்டு பின் தேவையான நோயறிதல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தற்பொழுது அவை முடிவினை பகுப்பாய்வு (Analysis) செய்வதற்கான இறுதி பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, தேசிய கணக்கெடுப்பிற்கான முதல் கட்டம் முடிவடைந்து இரண்டாம் கட்டம் கடந்த வாரம் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த வேளையில், ஓமானில் லாக்டவுன் மற்றும் பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டதன் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு நாளை முதல் தொடங்க முடிவெடுத்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேசிய கணக்கெடுப்பிற்காக தேர்வு செய்யப்படும் நபர்கள் சுகாதார அமைச்சகத்திடம் இருந்து ஒரு குறுஞ்செய்தியை பெறுவார்கள் என்றும் அதனை தொடர்ந்து அவர்கள் அருகிலிருக்கும் சுகாதார மையங்களில் அவர்களிடம் இருந்து மாதிரிகள் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தேசிய கணக்கெடுப்பில் பங்கேற்பாளர்களின் மாதிரி சேகரிப்புக்குப் பிறகு அவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் மற்றும் எலக்ட்ரானிக் ட்ரேக்கிங் பிரஸ்லேட்டை (electronic tracking bracelet) அவர்கள் அணியத்தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.