வளைகுடா செய்திகள்

இந்தியா, குவைத் இடையே சிறப்பு விமானங்கள் இயக்க DGCA ஒப்புதல்..!! விமான போக்குவரத்து விரைவில் தொடங்கும் என தகவல்..!!

இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்து சேவைகள் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், குவைத் மற்றும் இந்தியா இடையே சிறப்பு விமானங்களை இயக்குவது தொடர்பாக இந்திய சிவில் விமான போக்குவரத்து ஆணையம் கடந்த ஜூலை மாதம் 30 ம் தேதி கேட்டுக்கொண்டதை தொடர்ந்து, தற்காலிக விமான சேவை இயக்குவதற்கான ஒப்பந்தத்திற்கு குவைத் நாட்டின் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் வரை இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பு விமானங்கள் இயக்க அனுமதி கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு விமானம் இயக்குவது தொடர்பான இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, ஆகஸ்ட் 10, 2020 முதல் அக்டோபர் 24, 2020 வரை குவைத் நாட்டின் விமான நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு 500 விமான இருக்கைகள் வீதம் விமானங்களை இயக்க ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குவைத் ஏர்வேஸ் கார்ப்பரேஷனுக்கு 300 இடங்களும், ஜசீரா ஏர்வேஸுக்கு 200 இடங்களும் ஒதுக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

DGCA வின் டைரக்டர் ஜெனரல் யூசெப் அல்-ஃபவ்சான் கூறுகையில், “குவைத்தின் இந்த திட்டத்திற்கு இந்திய அரசிடம் இருந்து ஒப்புதல் பெற நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம். குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் இந்திய விமான நிறுவனங்களின் மூலம் இந்திய நாட்டவர்களை அழைத்துச்செல்ல ஒரு நாளைக்கு எத்தனை இருக்கைகள் ஒதுக்கப்படும் என்பதை இந்திய சிவில் விமான போக்குவரத்து ஆணையம் வழங்க நாங்கள் காத்திருக்கிறோம்,” என்று கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் (புறப்படுதல் மற்றும் வருகை) வணிக விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தற்போது இரு நாடுகளுக்கும் இடையே சிறப்பு விமானங்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளுக்கு இடையே சிறப்பு விமானம் இயக்க ஒப்பந்தம் போடப்பட்டு ஆகஸ்ட் 31 ம் தேதி வரையிலும் சிறப்பு விமானங்கள் இயக்கப்படவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

குவைத் நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பின் மூலம் இந்தியா திரும்ப விண்ணப்பித்தவர்களில் சுமார் 16,000 பேர், இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டதை தொடர்ந்து தாயகம் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் கொரோனா பரவலின் காரணமாக வேலையை இழந்தவர்கள் மற்றும் இந்தியா செல்ல விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தவர்கள் என மேலும் ஒரு 100,000 இந்தியர்கள் இந்த சிறப்பு விமான நடவடிக்கையின் மூலம் இந்தியாவிற்கு பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!