இந்தியா: பிரிட்டனில் இருந்து வந்த 6 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு..!! சுகாதார அமைச்சகம் தகவல்..!!

பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததை தொடர்ந்து பல்வேறு நாடுகள் பிரிட்டனுக்கும் தனது நாட்டிற்கும் இடையேயான விமான சேவைகளுக்கு தடை விதித்துள்ளன. அதே போல், இந்தியாவும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரிட்டன் இடையேயான விமான சேவைகளுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.

இருப்பினும், விமானத் தடை அறிவிப்பதற்கு முன் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த ஒரு சிலருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை தொடர்ந்து அவர்களின் மாதிரிகள் ஆய்விற்கு எடுத்து செல்லப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அதில் 6 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரை சேந்த 3 பேர், ஹைதெராபாத்தை சேர்ந்த 2 பேர் மற்றும் புனேவை சார்ந்த ஒரு நபர் என மொத்தம் 6 நபர்கள் புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஆறு பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக அதிக பாதிப்பைக் கொண்டு இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இது வரையிலும், இந்தியாவில் 10.22 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.