அமீரக செய்திகள்

UAE விசிட் விசாவை நீட்டிக்க மலிவான கட்டணத்தில் விமான பயணம்.. இலவச ஷட்டில் சேவை, டிக்கெட் திருத்த விருப்பம் என ஏராளமான சலுகைகளை வழங்கும் சலாம் ஏர்..!!

UAE விசிட் விசா வைத்திருப்பவர்கள் தங்களின் விசா காலத்தை நீட்டிக்க விரும்பினால், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சலாம் ஏர் விமான நிறுவனத்தின் மிக மலிவான விமானச் சேவையை பயண்படுத்திக்கொள்ளலாம். இதன் மூலம், குறைந்த செலவில் நாட்டில் கூடுதல் நாட்கள் தங்குவதற்கு நீங்கள் திட்டமிடலாம்.

மிகக் குறைந்த கட்டண விமான நிறுவனமான சலாம் ஏர், மஸ்கட் மற்றும் புஜைரா இடையே விமான போக்குவரத்து சேவையை கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. மேலும், வாரத்தில் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் இந்த விமானங்கள் இயக்கப்படும் என்றும் விமான நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில், தற்போது அமீரகத்தில் சுற்றுலா விசாவை நீட்டிக்க விரும்புவோருக்கு விரைவாக மற்றும் குறைந்த பட்ஜெட்டில் செல்வதற்கு குடியிருப்பாளர்களிடையே அதிகம் விரும்பப்படும் விமானமாக இந்த புதிய வழித்தடம் மாறி வருவதாக அமீரகத்தில் இயங்கி வரும் டிராவல் ஏஜென்ட்கள் தெரிவித்துள்ளனர்.

அமீரகத்தின் பிற விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் மற்ற விமானச் சேவைகளுடன் ஒப்பிடும் போது, இந்த மஸ்கட் – புஜைரா சேவை பயணிகளுக்கு சுமார் 200 திர்ஹம்களை மிச்சப்படுத்துவதாக டிராவல் நிறுவன உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

பெரும்பாலும், வேலைக்காக வந்தவர்களும், அமீரகத்தில் தங்கியிருப்பவர்கள் தங்கள் குழந்தைகளுடன் அல்லது குடும்பத்துடன் நேரத்தை செலவிடுபவர்களும் ஃபுஜைராவிலிருந்து விமானங்களைத் தேர்வு செய்கிறார்கள். இதில் மிச்சப்படுத்தும் பணத்தை வைத்து கூடுதலாக நாட்டிற்குள் தங்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும், நாட்டிற்குள் இருந்து கொண்டே விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கூடுதல் விலை மற்றும் செல்லுபடியாகும் தன்மையைக் கருத்தில் கொண்டு, பெரும்பாலான சுற்றுலாவாசிகள் நாட்டை விட்டு வெளியேறி புதிய விசாவில் திரும்பி வர விரும்புவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இலவச ஷட்டில் சேவையும் நன்மைகளும்:

பார்வையாளர்களின் ஃபுஜைரா பேக்கேஜில் துபாய் மற்றும் ஷார்ஜாவில் இருந்து இலவச பிக்-அப் மற்றும் டிராப்-ஆஃப் ஆகிய சலுகைகளும் அடங்கும். அதன்படி, விமானம் புறப்படும் நாள்களில், துபாயில் உள்ள யூனியன் மெட்ரோ நிலையத்திற்கு அருகிலுள்ள தேராவிலிருந்து ஒரு பேருந்து பயணிகளை இலவசமாக ஏற்றிச் செல்லும்.

அதுபோல, ஷார்ஜாவிலிருந்து வரும் பயணிகள் சவுதி மசூதிக்கு அருகில் இருந்து பஸ்ஸில் பயணிக்கலாம். மேலும் திரும்பி வரும்போது, ​​இந்த பேருந்துகள் பயணிகளை அந்தந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பும். எனவே, இந்த இலவச ஷட்டில் சேவையில் பார்வையாளர்கள் பேருந்து அல்லது டாக்ஸி கட்டணத்தை சேமிக்கலாம்.

அதுமட்டுமின்றி, இந்த பேக்கேஜில் ஃபுஜைரா விமான நிலையத்திலிருந்து பயணிக்கும் வசதி இருப்பதால், இந்த பேக்கேஜ் மிகவும் பிரபலமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. ஏனெனில், வழக்கமாக விசா மாற்றத்திற்காக பார்வையாளர்கள் துபாய் அல்லது ஷார்ஜா விமான நிலையங்களில் இருந்து புறப்படும் போது, அங்கு கடுமையான நெரிசலை எதிர்கொள்கின்றனர்.

முதல்முறையாக, புஜைரா விமான நிலையத்திலிருந்து மஸ்கட்டிற்கு தொடங்கப்பட்ட சர்வதேச விமானம் சலாம் ஏர் சேவையாகும். எனவே, செக்-இன் மற்றும் இமிகிரேஷன் செயல்முறைகளை பயணிகள் விரைவில் முடிக்கலாம்.

அத்துடன், புதிய விசிட் விசா அதேநாளில் அனுமதிக்கப்படாவிட்டால், அடுத்த நாளுக்கு இலவச டிக்கெட் திருத்தத்தை விமான நிறுவனம் வழங்குவதாகவும், விமானம் பயணிகளை துபாய்க்கு அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!