சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையை மே இறுதி வரை நீட்டித்தது இந்தியா..!!

கொரோனாவின் பாதிப்பால் இந்தியாவில் கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட சர்வதேச விமானப் போக்குவரத்துத் தடையானது ஒரு வருடமாக நீடித்திருந்த நிலையில், இந்த தடையை இந்திய அரசு மே 31 ம் தேதி வரை நீட்டித்துள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

DGCA வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில், சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவைகளுக்கான தடையினை மே 31 ம் தேதி நள்ளிரவு 11.59 நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இருப்பினும், சரக்கு விமானப் போக்குவரத்து சேவைகள் மற்றும் சிவில் விமான ஒழுங்குமுறை கட்டுப்பாட்டாளர்களால் அனுமதிக்கப்பட்ட திருப்பி அனுப்பப்படும் விமானங்கள் (repatriation flights), சார்ட்டர் விமானங்கள், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயங்கும் விமானங்கள் மற்றும் ஏர் பபுள் ஒப்பந்தத்தின் கீழ் இயங்கும் விமான சேவைகள் தொடர்ந்து இயக்கப்படும் என்று சிவில் விமான கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

எனினும், இந்தியாவில் மிகத் தீவிரமாகப் பரவி வரும் கொரோனாவின் பாதிப்பால் ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, ஓமான், குவைத் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் விமான சேவைக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.