இந்த ஆண்டிற்கான மீதமுள்ள IPL போட்டிகள் அமீரகத்திற்கு மாற்றம்..!! உறுதி செய்த BCCI..!!
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வரும் IPL T20 கிரிக்கெட் தொடரானது கடந்த வருடம் கொரோனா தாக்கத்தினால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி முடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இந்த வருடத்திற்கான IPL கிரிக்கெட் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தது. பின்னர், கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கத்தின் காரணமாக இந்தியா முழுவதும் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்ததன் காரணமாகவும் வீரர்களில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதையும் தொடர்ந்து IPL போட்டியானது தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
“வீரர்கள், ஊழியர்கள் மற்றும் IPL ஏற்பாட்டில் ஈடுபட்டுள்ள மற்ற பங்கேற்பாளர்களின் பாதுகாப்பு குறித்து சமரசம் செய்ய விரும்பவில்லை. இந்த முடிவு அனைத்து தரப்பினரின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நல்வாழ்வை மனதில் வைத்து எடுக்கப்பட்டது” என்று இந்தியாவில் போட்டி இடைநிறுத்தம் செய்யப்படும் போது BCCI தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் 2021 சீசனுக்கான மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்று BCCI துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
இருப்பினும், போட்டி நடைபறவுள்ள தேதிகள் குறித்து இன்னும் இறுதி முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், முந்தைய அறிக்கையின்படி, செப்டம்பர் 18 அல்லது 19 ஆம் தேதிகளில் IPL போட்டி மீண்டும் தொடங்கலாம் என்றும், இறுதிப் போட்டி அக்டோபர் 9 அல்லது 10 ஆம் தேதிகளில் நடைபெறக்கூடும் என்றும் எதிர்பார்ககப்படுகின்றது.