அமீரக செய்திகள்

UAE: ரமலானை முன்னிட்டு பார்க்கிங் கட்டணம், பேருந்து, டார்ப் டோல் கேட் செயல்படும் நேரங்களில் மாற்றம்..!! புதிய அறிவிப்பை வெளியிட்ட அபுதாபி..!!

அபுதாபியில் உள்ள ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) ரமலான் மாதம் துவங்குவதை முன்னிட்டு கட்டண வாகன நிறுத்தம் (மவாகிஃப்) நேரம், டோல் கேட் அமைப்பு, பேருந்துகள் செயல்படும் நேரங்களில் மாற்றங்களை அறிவித்துள்ளது. ITC அறிவித்துள்ள புதிய மாற்றங்கள் குறித்த விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

மவாகிஃப் பார்க்கிங் கட்டணம்

ITC மவாகிஃப் பார்க்கிங் கட்டணம் தற்போதைய நேரத்தைப் போலவே, சனி முதல் வியாழன் வரை, காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பார்க்கிங் இலவசம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டார்ப் டோல் கேட் அமைப்பு

ரமலான் மாதத்தில் Darb டோல் கட்டண நேரத்தில் மாறுதல் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி ரமலான் மாதத்தில் டோல் கட்டணம் காலை 8 மணி முதல் 10 மணி வரை மற்றும் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை என போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களில் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக சனிக்கிழமை முதல் வியாழன் வரை செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

பேருந்து சேவைகள்

ரமலான் மாதத்தில், அபுதாபி நகர பேருந்து சேவைகள் காலை 5 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் அபுதாபி புறநகர் பேருந்து சேவைகள் காலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயங்கும் என்றும் இதில் சில பேருந்து சேவைகள் 24/7 என முழுநேரமும் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் வழித்தடங்கள் 22, 54, 65, 67, 101, 110, A1 மற்றும் A2 ஆகியவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல் அய்ன் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில், பொதுப் பேருந்து சேவை ரமலான் மாதத்தில் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் அபுதாபி மற்றும் அல் அய்னில் உள்ள பெரும்பாலான பிராந்திய பேருந்து சேவைகளின் நேரம் அப்படியே இருக்கும் எனவும் அபுதாபி ஐலேண்ட் மற்றும் அல் அய்ன் நகருக்குள் சில சேவைகளின் பேருந்து கால இடைவெளியில் சிறிது மாற்றம் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ரமலான் மாதத்தில் அல் தஃப்ராவில் உள்ள பொதுப் பேருந்து சேவை தற்போதைய சேவை நேரத்தில் குறைந்த மாற்றங்களுடன் செயல்படும் மற்றும் இஃப்தார் நேரத்தில் பேருந்துகள் சேவை நிறுத்தப்படும் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அபுதாபி எக்ஸ்பிரஸ் சேவைகள் வார நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் காலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆன்-டிமாண்ட் பேருந்து சேவையானது, அனைத்து வார நாட்களிலும் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை வழக்கம் போல் இயங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி மையங்கள்

அபுதாபி நகர முனிசிபாலிட்டி மற்றும் அல் அய்ன் சிட்டி முனிசிபாலிட்டியில் உள்ள ITC வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி மையங்கள்  திங்கள் முதல் வியாழன் வரை காலை 9 மணி முதல் மதியம் 2.30 மணி வரையிலும், வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

ITC-ன் இணையதளமான www.itc.gov.ae, Darbi மற்றும் Darb இணையதளங்கள் மற்றும் அப்ளிகேஷன்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ITC இன் சேவைகளுக்கு ஆன்லைனில் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக, வாடிக்கையாளர்கள் 24/7 என்ற முழுநேர சேவைகளைக் கோர நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் ஒருங்கிணைந்த சேவை ஆதரவு மையத்தை 800850 அல்லது டாக்ஸி அழைப்பு மையம்: 600535353 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!