அமீரக செய்திகள்

அமீரகத்தில் புதிதாக மேலும் மூன்று பேருக்கு ‘மங்கிபாக்ஸ் வைரஸ் நோய்’ பாதிப்பு.. சுகாதார அமைச்சகம் அறிக்கை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிதாக மூன்று பேருக்கு புதிய வைரஸ் நோயான மங்கிபாக்ஸின் தொற்று பதிவாகியுள்ளதாக அமீரகத்தின் சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) அறிவித்துள்ளது. உலகின் சில நாடுகளிடையே பரவி வரும் இந்த புதிய வைரஸ் நோயின் முதலாவது பாதிப்பு அமீரகத்தில் கடந்த மே 24 ம் தேதி அன்று மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்த 29 வயது பார்வையாளர் ஒருவருக்கு கண்டறியப்பட்டதாக அமீரக அரசு அறிவித்திருந்தது.

அமீரகத்தில் இந்த புதிய வைரஸின் பாதிப்பு தற்போது மேலும் மூன்று நபர்களுக்கு கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து தகுந்த தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவும், பயணத்தின் போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவும், அதிக கூட்டத்தில் பாதுகாப்பாக இருக்கவும் மற்றும் ஆபத்தான நடத்தைகளைத் தவிர்க்கவும் சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகம் அனைத்து சமூக உறுப்பினர்களையும் வலியுறுத்தியுள்ளது.

மங்கிபாக்ஸ் எனும் இந்த புதிய வைரஸ் நோய் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட நபர் அல்லது விலங்குடன் நெருங்கிய தொடர்பு, உடல் திரவங்கள், சுவாசத் துளிகள் அல்லது அசுத்தமான பொருட்களால் மற்ற மனிதர்களுக்கு பரவுவதாகவும், மேலும் இது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் பரவ கூடியது எனவும் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், மங்கிபாக்ஸ் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையும் வரை மருத்துவமனைகளில் முழுமையாக தனிமைப்படுத்துவது, அவர்களின் நெருங்கிய தொடர்புகளை 21 நாட்களுக்கு குறையாமல் வீட்டில் தனிமைப்படுத்தி அவர்களின் உடல்நிலையை கண்காணிப்பது உட்பட மங்கிபாக்ஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் தொடர்புகளைக் கையாள்வதற்கான ஒருங்கிணைந்த தேசிய மருத்துவ வழிகாட்டுதலுக்கு நாட்டில் உள்ள அனைத்து சுகாதார அதிகாரிகளும் உறுதிபூண்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஐக்கிய அரபு அமீரக சுகாதார அதிகாரிகள் விசாரணை, தொடர்புகளை ஆய்வு செய்தல் மற்றும் அவர்களின் உடல்நிலையை கண்காணித்தல் உட்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அனைத்து சமூக உறுப்பினர்களுக்கும் அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

தொற்று நோய்களிலிருந்து நிலையான செயல்திறன் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கும், மிக உயர்ந்த உலகளாவிய நடைமுறைகளுக்கு இணங்க, தொற்றுநோயியல் கண்காணிப்பு முறையை செயல்படுத்துவதில் மற்ற சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து ஒத்துழைப்பதாகவும் அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் மங்கிபாக்ஸ் வைரஸ் நோய் தொடர்பான தகவல்களை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து பெறவும், வதந்திகள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்கவும் சமூக உறுப்பினர்களுக்கு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!