அமீரக செய்திகள்

துபாய் முழுவதும் EXPO 2020 பார்வையாளர்களுக்காக 126 இலவச பேருந்துகளை இயக்கும் RTA..!! முழு விபரம் உள்ளே..!! 

அக்டோபர் 1 ஆம் தேதி துவங்கவிருக்கும் “எக்ஸ்போ 2020 துபாய்” கண்காட்சிக்கு செல்லும் பார்வையாளர்களுக்கு என பிரத்யேமாக ‘எக்ஸ்போ ரைடர்’ என்ற 126 பொதுப் பேருந்துகளை துபாய் முழுவதும் ஒன்பது இடங்களில் இருந்து இலவசமாக இயக்கவிருப்பதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.

கூடுதலாக, துபாய் நகர ஹோட்டல்களில் இருந்து எக்ஸ்போ செல்லக்கூடிய பார்வையாளர்களை நேரடியாக எக்ஸ்போ தளத்திற்கு கொண்டு செல்லும் பொருட்டு புதிதாக இரண்டு வழிகள் தொடங்கப்படும் என்றும் RTA தெரிவித்துள்ளது. அதனுடன் எக்ஸ்போ கேட்களுக்கு (EXPO Gates) இடையே பயணிகளை ஏற்றிச் செல்லவும், கூடுதலாக பார்க்கிங் பகுதியில் இருந்து பார்வையாளர்களை எக்ஸ்போ தளத்திற்கு அழைத்து செல்லவும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் RTA கூறியுள்ளது.

RTA அறிவித்துள்ள இந்த இலவச பேருந்துகள் மூலம், சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரையிலான நாட்களில் 1,956 நேரடி தினசரி சேவைகளும், வார இறுதி நாட்களான வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 2,203 நேரடி சேவைகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பேருந்து சேவைகள் மூன்று முதல் 60 நிமிடங்கள் இடைவெளியில் இடத்திற்கு ஏற்றவாறு இயக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

RTA- வின் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவரும், தலைமை இயக்குனருமான மத்தார் முகமது அல் தயர் அவர்கள், துபாயின் பல்வேறு இடங்களிலிருந்தும், அதேபோன்று அமீரகத்தின் அனைத்து எமிரேட்டிலிருந்தும் எக்ஸ்போ 2020 பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான, மென்மையான மற்றும் விரைவான போக்குவரத்து சேவையை வழங்க மொத்தம் 203 பேருந்துகளுடன் RTA தயாராக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் கூறுகையில், இந்த பேருந்துகள் அதிக பாதுகாப்பு மற்றும் ஆடம்பரத் தரங்கள் மற்றும் வசதியான இருக்கைகளைக் கொண்டுள்ளதாகவும், யூரோ 6 தர அடிப்படையிலான குறைந்த கார்பன் உமிழ்வு தரங்களுடன் இணக்கமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் இதுவே MENA பிராந்தியத்தில் அதாவது மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா பிராந்தியத்தில் முதலாவதாக அறிமுகம் செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

>> முதல் நிலையம் பாம் ஜுமைரா: இங்கு 6 பேருந்துகளை கொண்டு சனிக்கிழமை முதல் புதன் வரை இரு திசைகளிலும் ஒரு நாளைக்கு 54 பேருந்து சேவைகள் இயக்கப்படும். வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரு திசைகளிலும் ஒரு நாளைக்கு 57 பேருந்து சேவைகள் இயக்கப்படும். பேருந்து சேவைகளுக்கான இடைவெளி 15 நிமிடங்களாக இருக்கும்.

>> இரண்டாவது நிலையம் அல் பராஹா: இங்கு 7 பேருந்துகளை கொண்டு சனிக்கிழமை முதல் புதன் வரை இரு திசைகளிலும் ஒரு நாளைக்கு 62 பேருந்து சேவைகள் இயக்கப்படும். வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரு திசைகளிலும் ஒரு நாளைக்கு 68 பேருந்து சேவைகள் இயக்கப்படும். பேருந்து சேவைகளுக்கான இடைவெளி 30 நிமிடங்களாக இருக்கும்.

>> மூன்றாவது நிலையம் அல் குபைபா: மெட்ரோ, பொது பேருந்துகள், மரைன் போக்குவரத்து மற்றும் டாக்ஸிகள் வரை பரவலான பல்வேறு வெகுஜன போக்குவரத்து வசதிகளை கொண்டிருக்கும் இங்கு, 12 பேருந்துகளை கொண்டு சனிக்கிழமை முதல் புதன் வரை இரு திசைகளிலும் ஒரு நாளைக்கு 74 பேருந்து சேவைகள் இயக்கப்படும். வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரு திசைகளிலும் ஒரு நாளைக்கு 76 பேருந்து சேவைகள் இயக்கப்படும். பேருந்து சேவைகளுக்கான இடைவெளி 15 நிமிடங்களாக இருக்கும்.

>> நான்காவது நிலையம் எடிசலாட்: இங்கு 8 பேருந்துகளை கொண்டு சனிக்கிழமை முதல் புதன் வரை இரு திசைகளிலும் ஒரு நாளைக்கு 70 பேருந்து சேவைகள் இயக்கப்படும். வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரு திசைகளிலும் ஒரு நாளைக்கு 72 பேருந்து சேவைகள் இயக்கப்படும். பேருந்து சேவைகளுக்கான இடைவெளி தெரிவிக்கப்படவில்லை.

>> ஐந்தாவது நிலையம் குளோபல் வில்லேஜ்: இங்கு 3 பேருந்துகளை கொண்டு அனைத்து வார நாட்களிலும் தினமும் 10 பேருந்து சேவைகள் இயக்கப்படும். பேருந்து சேவைகளுக்கான இடைவெளி 60 நிமிடங்களாக இருக்கும்.

>> ஆறாவது நிலையம் இன்டர்நேஷனல் சிட்டி: இங்கு 8 பேருந்துகளை கொண்டு சனிக்கிழமை முதல் புதன் வரை இரு திசைகளிலும் ஒரு நாளைக்கு 78 பேருந்து சேவைகள் இயக்கப்படும். வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரு திசைகளிலும் ஒரு நாளைக்கு 82 பேருந்து சேவைகள் இயக்கப்படும். பேருந்து சேவைகளுக்கான இடைவெளி 15 நிமிடங்களாக இருக்கும்.

>> ஏழாவது நிலையம் துபாய் சிலிக்கான் ஒயாசிஸ்: இங்கும் 8 பேருந்துகளை கொண்டு சனிக்கிழமை முதல் புதன் வரை இரு திசைகளிலும் ஒரு நாளைக்கு 78 பேருந்து சேவைகள் இயக்கப்படும். வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரு திசைகளிலும் ஒரு நாளைக்கு 82 பேருந்து சேவைகள் இயக்கப்படும். பேருந்து சேவைகளுக்கான இடைவெளி 15 நிமிடங்களாக இருக்கும்.

>> எட்டாவது நிலையம் துபாய் மால்: இங்கு 5 பேருந்துகளை கொண்டு சனிக்கிழமை முதல் புதன் வரை இரு திசைகளிலும் ஒரு நாளைக்கு 55 பேருந்து சேவைகள் இயக்கப்படும். வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரு திசைகளிலும் ஒரு நாளைக்கு 59 பேருந்து சேவைகள் இயக்கப்படும். பேருந்து சேவைகளுக்கான இடைவெளி 30 நிமிடங்களாக இருக்கும்.

>> ஒன்பதாவது நிலையம் துபாய் சர்வதேச விமான நிலையம்: இங்கு 8 பேருந்துகளை கொண்டு வாரத்தின் ஏழு நாட்களிலும் இரு திசைகளிலும் ஒரு நாளைக்கு 52 பேருந்து சேவைகள் இயக்கப்படும். பேருந்து சேவைகளுக்கான இடைவெளி 20 நிமிடங்களாக இருக்கும்.

இது தவிர அமீரகத்தின் மற்ற எமிரேட்களிலிருந்து எக்ஸ்போ 2020 க்கு பார்வையாளர்களை கொண்டு செல்வதற்கான திட்டத்தை RTA முன்பு அறிவித்திருந்தது. அதன்படி அபுதாபி, அல் அய்ன், ஷார்ஜா, புஜைரா, அஜ்மான் மற்றும் ராஸ் அல் கைமாவில் இருந்து எக்ஸ்போ தளத்திற்கு இயக்கப்படும் பேருந்து சேவைகள் குறித்த தகவலை வெளியிட்டிருந்தது.

இந்த பகுதிகளிலிருந்து மொத்தம் 77 பேருந்துகளை கொண்டு சனிக்கிழமை முதல் புதன் வரையிலான நாட்களில் நாள் ஒன்றுக்கு 193 பேருந்து சேவைகள் இயக்கப்படும் என்றும். வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஒரு நாளைக்கு 213 பேருந்து சேவைகள் இயக்கப்படும் என்றும் RTA அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!