அமீரக செய்திகள்

எக்ஸ்போ 2020 துபாயின் துவக்க விழா மேடையை அலங்கரித்த இந்திய சிறுமி..!! ஒரே இரவில் உலகளவில் ஃபேமஸ்..!!

உலகமே எதிர்பார்த்த எக்ஸ்போ 2020 துபாய் பிரம்மாண்ட முறையில் துவக்க விழாவை எதிர்கொண்டு தற்சமயம் தினசரி பார்வையாளர்களைக் கையாண்டு வருகிறது.

செப்டம்பர் 30 ம் தேதி நடைபெற்ற இந்த பிரம்மாண்ட தொடக்க விழாவில் முக்கிய பங்கு வகித்த அமீரகத்தில் வசிக்கும் 12 வயதேயான இந்தோ-பெலாரஷ்ய சிறுமி அந்த ஒரே இரவில் உலகம் முழுவதும் புகழ்பெற்றுள்ளார்.

எக்ஸ்போ 2020 துபாயின் தொடக்க விழாவில் முக்கிய பங்காற்றிய JSS சர்வதேச பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவரான மீரா சிங் எக்ஸ்போ துவக்க விழாவின் போது முக்கிய வேடத்தில் நடிப்பதற்காக நூற்றுக்கணக்கான குழந்தைகளிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அடர் இளஞ்சிவப்பு மற்றும் அமீரகத்தின் பாரம்பரிய தங்க ஆபரணங்களில் அலங்கரிக்கப்பட்ட மீரா அமீரகத்தின் பாரம்பரிய ஆடை அணிந்து, துவக்க விழாவில் எமிராட்டி சிறுமியாக அமீரகத்தின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் பலவற்றின் கதைகளைக் கூறும் தாத்தாவின் பேத்தியாக நடித்துள்ளார்.

எக்ஸ்போ 2020 துபாயின் அதிகாரப்பூர்வ லோகோவை ஊக்குவித்த சாருக் அல் ஹடிட் தொல்பொருள் தளத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான தங்க மோதிரத்தின் நகலை மீரா எக்ஸ்போவின் துவக்க விழாவின் போது உலகிற்கு காட்டினார்.

அமீரகத்தில் இளம் மாடல், நடிகர் மற்றும் நடனக் கலைஞராக வலம் வரும் மீரா எக்ஸ்போ துவக்க விழாவின் தனது அனுபவத்தைப் பற்றிக் கூறுகையில், “நான் அங்கு ஒரு தேவதை போல் உணர்ந்தேன். அனைத்து பூக்கள் மற்றும் பட்டாம்பூச்சிகளுடன், அது ஒரு மந்திர தோட்டம் போல் இருந்தது. அந்த இடத்தில் நான் அற்புதமாக உணர்ந்தேன்” என்று கூறியுள்ளார்.

அபுதாபியில் நடந்த ஐக்கிய அரபு அமீரக தேசிய தினத்தின் அதிகாரப்பூர்வ விழா போன்ற பெரிய நிகழ்ச்சிகளில் அவர் நடித்திருந்தாலும், எக்ஸ்போ திறப்பு விழா ஆரம்பிக்க இருந்த சில நிமிடங்களுக்கு முன்பு தான் பதட்டமாக இருந்ததாகவும் பின்னர் பல முறை ஒத்திகை செய்ததன் விளைவாகவும் தனக்கு இருந்த நம்பிக்கையினாலும் வெற்றிகரமாக தனக்குரிய பணியினை செய்து முடித்ததாக மீரா தெரிவித்துள்ளார்.

தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பிறர் முன்னிலையில் அத்துடன் உலகெங்கிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்பது பெரியவர்களுக்கே ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதில் 12 வயதான சிறுமி அதுவும், நீண்ட மற்றும் கனமான உடை மற்றும் பருமனான தங்க நகைகளை அணிந்துகொண்டு நடிப்பதென்றால் ஆச்சரியம்தான். இதனாலேயே அவர் உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளார். ஆடை ஒத்திகையின் போது தனக்கு சற்று சோர்வாக இருப்பதாக உணர்ந்திருந்தாலும், துவக்க நாளில் முழு உற்சாகத்துடன் இருந்ததாக மீரா தெரிவித்துள்ளார்.

பரதநாட்டியம் முதல் பாலே (ballet) வரை பல்வேறு வகையான இந்திய மற்றும் மேற்கத்திய நடனங்களை அறிந்து வைத்திருக்கும் மீரா தனக்கு தெரிந்த நடனம், யோகா மற்றும் கன்ட்ரோஷன்ஸ் மூலம் முழு எனர்ஜியுடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தை பருவத்திலிருந்தே கண்ணாடியின் முன்பாகவும் படங்களுக்காகவும் போஸ் கொடுப்பதையும் மீரா விரும்பியதாக பெற்றோர் கூறுகின்றனர். இதனால், பெலாரஸைச் சேர்ந்த மீராவின் தாய் ஸ்வேதா, அவளுக்கு ஆறு வயதாக இருந்தபோது குழந்தைகளுக்கான ரேம்ப் வாக்கிற்கு (Ramp Walk) அழைத்துச் சென்றதாக கூறுகின்றார்.

அதனைத் தொடர்ந்து மாடல் உலகில் தடம் பதித்த மீரா மெக்டொனால்ட்ஸ், GMC, ஆடி, BMW, ஆல்டார் பிராப்பர்டீஸ் போன்ற பெரிய பிராண்டுகளின் விளம்பரங்களில் நடித்துள்ளார், மேலும் Ikea, ட்ரயானோ, யாஸ் மால், லெவல் கிட்ஸ் இன் சிட்டி வாக் போன்ற கடைகளுக்கான விளம்பரங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார்.

“மூன்று மாதங்களுக்கு முன்பு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் மீரா மற்ற இரண்டு சிறுமிகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்டபோது குடும்பமே சந்தோஷத்தின் உச்சிக்குச் சென்றோம்” என்று அவரது தந்தை ஜிதேந்திர சிங் கூறுகின்றார்.

“இது ஒரு நீண்ட செயல்முறை. எக்ஸ்போ அமைப்பாளர்கள் மிகவும் கவனத்துடன் இருந்தனர். அவள் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக வார இறுதி நாட்களிலோ அல்லது மாலை நேரத்திலோதான் ஒத்திகைகளை வைத்திருந்து மீராவிற்கு கற்றுக் கொடுத்தார்கள்” என தெரிவித்துள்ளார்.

எக்ஸ்போவிற்கு நீங்களும் செல்ல விரும்பினால் அது குறித்த முழுமையான தகவலை கீழே உள்ள லிங்கில் சென்று காணலாம்.

UAE: எக்ஸ்போவிற்கு செல்ல விரும்புகிறீர்களா..?? உங்களுக்கான முழுமையான வழிகாட்டி இங்கே..!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!