UAE: போக்குவரத்து அபராதத்தை விரைவில் செலுத்தினால் 35% தள்ளுபடி..!!

அபுதாபியின் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் பல போக்குவரத்து விதிமீறல்களைச் செய்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுவதைத் தவிர்க்க, அபுதாபி வாகன ஓட்டிகள், வட்டியில்லா தவணைகளில் போக்குவரத்து அபராதத்தை செலுத்தும் முயற்சியில் பயனடையுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் சாலை விதிமுறைகளை மீறி குற்றத்தைச் செய்த இரண்டு மாதங்களுக்குள் போக்குவரத்து அபராதத்தை செலுத்தினால், மொத்த அபராதத்தில் 35 சதவீத தள்ளுபடியையும், ஒரு வருடத்தில் 25 சதவீத தள்ளுபடியையும் பெற்று பயனடையுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அபுதாபி காவல்துறை, போக்குவரத்து அபராதம் உள்ள ஓட்டுநர்கள் தங்களுக்கு ஏற்ப இன்ஸ்டால்மெண்ட்டில் பகுதி பகுதியாக அபராதம் செலுத்த அனுமதிக்கும் முயற்சி, ஐக்கிய அரபு அமீரகத்ததில் உள்ள ஐந்து வங்கிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகிறது என தெரிவிதுள்ளது.
இதில் அபுதாபி வணிக வங்கி (ADCB), அபுதாபி இஸ்லாமிய கமர்ஷியல் வங்கி (ADIB), ஃபர்ஸ்ட் அபுதாபி வங்கி (FAB), மஷ்ரெக் அல் இஸ்லாமி மற்றும் எமிரேட்ஸ் இஸ்லாமிய வங்கி ஆகியவை இதில் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்த சேவையைப் பெற, ஓட்டுநர்கள் இந்த வங்கிகளில் ஒன்றின் மூலம் வழங்கப்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருக்க வேண்டும். அத்துடன் போக்குவரத்து அபராதத்தை தவணைகளில் செலுத்துவதற்கு முன்பதிவு செய்த நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்கு மிகாமல் ஒரு காலத்திற்குள், வாகன ஓட்டுநர் வங்கியை நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும்.
“இந்தச் சேவையானது அபுதாபி காவல்துறையின் சேவை மையங்கள் மற்றும் இணையதளம் மற்றும் ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன் போன்ற டிஜிட்டல் சேனல்கள் மூலம்எந்த வட்டியும் இல்லாமல் ஒரு வருட தவணை முறையுடன், அபராதம் செலுத்த அனுமதிக்கிறது.” என்று காவல்துறை கூறியுள்ளது.
பல வாகன ஓட்டிகளுக்கு எளிதாகவும் வசதியாகவும் இது இருப்பதால் தவணை முறை வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் வாகன ஓட்டிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை ஆண்டு முழுவதும் தவணை முறையில் செலுத்துவதன் மூலம் ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை இந்தச் சேவை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
அபுதாபி எமிரேட்டில் கடந்த செப்டம்பர் 2020 இல் வெளியிடப்பட்ட 2020 ஆம் ஆண்டின் போக்குவரத்துச் சட்ட எண் 5 இன் கீழ், அபுதாபி எமிரேட்டில், போக்குவரத்து அபராதம் 7,000 திர்ஹங்களுக்கு மேல் இருந்தால் வாகனத்தை பறிமுதல் செய்ய வழிவகுக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.