இந்திய செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்கு ‘மங்கிபாக்ஸ்’ பரிசோதனை..!! இந்திய அரசு அறிவுறுத்தல்..!!

ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் சுமார் 100 பேருக்கு மேல் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள ‘மங்கிபாக்ஸ்’ கடந்த சில நாட்களாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து மங்கிபாக்ஸ் தொற்றுக்காக அனைத்து சர்வதேச நுழைவு பகுதிகளில் இருந்து வரும் நபர்களுக்கான  கண்காணிப்பை இந்தியா முடுக்கிவிட்டுள்ளது.

மங்கி பாக்ஸ் என்பது காட்டு விலங்குகளில் இருந்து உருவாகும் ஒரு வைரஸாகும், இது எப்போதாவது மனிதர்களுக்குத் தாவி, 2-4 வாரங்கள் நீடிக்கும் ஒரு நோயை ஏற்படுத்துகிறது. இது காய்ச்சல் மற்றும் புண்களின் அறிகுறிகளால் வெளிப்படுகிறது. மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் இந்த நோய் பரவுகிறது மற்றும் பொதுவாக இந்த நோய்க்கு அதிக இறப்பு விகிதம் இல்லை. தற்போது வரை பெல்ஜியம், ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது.

வெவ்வேறு நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளதையடுத்து மங்கிபாக்ஸ் தொடர்பான அறிகுறிகளைக் காட்டும் நோய் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளின் பரிசோதனைக்காக மாதிரிகளை அடையாளம் கண்டு சேகரிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

“குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளுக்காக, மங்கிபாக்ஸ் காய்ச்சலுக்கான முதல் ஸ்கிரீனிங் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அனைத்து சர்வதேச நுழைவு புள்ளிகளையும் நிர்வகிக்கும் அதிகாரிகளுக்கு விரிவான SOP வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது” என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அத்துடன் மாதிரிகள் எடுக்கப்பட்டு, பயோ சேஃப்டி லெவல் 4 ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட வேண்டும் என்றும் அந்த அதிகாரி அறிவுறுத்தல்களை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும் சந்தேகத்திற்கிடமான நபர்களின் சில மாதிரிகள் வைரஸ் நோய்க்கு எதிரான பரிசோதனைக்காக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் உள்ள நாட்டின் உச்ச வைராலஜி ஆய்வகமான புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு (NIV) அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“எந்தவொரு எச்சரிக்கை அறிகுறிகளையும் கவனிக்க ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை மங்கி பாக்ஸ் காய்ச்சலின் பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை. மற்ற நாடுகளில் மனிதர்களிடம் இந்த பாதிப்புகள் கண்டறியப்படுவதால், இந்தியா எப்போதும் போல் ஒரு செயலூக்கமான நடவடிக்கையை இதனை எடுத்துள்ளது,” என்று அதிகாரி தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!