அமீரக சட்டங்கள்

துபாய்: விசிட் விசாவில் இருப்பவர்கள் காலாவதியான டிரைவிங் லைசென்ஸை புதுப்பிக்க முடியுமா..?? RTA கூறுவது என்ன..??

ஐக்கிய அரபு அமீரகத்தில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் முதன்மையான விருப்பங்களில் ஒன்றாகும். அவ்வாறு டிரைவிங் லைசென்ஸை் பெற்றவர்கள் உரிய காலத்திற்குள் அதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதும் முக்கியமாகும்.

அமீரகத்தில் இருக்கும் குடிமக்கள் தங்களின் ஓட்டுநர் உரிமத்தை ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் புதுப்பிக்க வேண்டும், அதே சமயம் வெளிநாட்டவர்கள் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் புதுப்பிக்க வேண்டும்.

துபாயை பொறுத்தவரை, ஆவணங்கள் சரியாக இருந்தால் ஆன்லைன் செயல்முறை மூலம் மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்குள் டிரைவிங் லைசென்ஸை புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்காக அங்கீகரிக்கப்பட்ட மையத்தில் கண் பரிசோதனை செய்து, RTA இணையதளம் அல்லது செயலியில் உங்கள் விவரங்களை உள்ளிட்டு, நிலுவையில் உள்ள அபராதங்களை செலுத்தி, புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். கண் பரிசோதனை மற்றும் டெலிவரி கட்டணம் உட்பட டிரைவிங் லைசென்ஸை புதுப்பிக்க 400 திர்ஹம்களுக்கு மேல் செலவாகும்.

இருப்பினும் சில சந்தர்ப்பங்களில், வெளிநாட்டவர்கள் தங்கள் டிரைவிங் லைசென்ஸை புதுப்பிக்க முடியாது அல்லது ஆவணம் அதிகாரிகளால் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கலாம். இது போன்ற சந்தர்ப்பங்களின் போது எழும் சில பொதுவான கேள்விகளும் அவற்றின் பதில்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

விசிட் விசாவில் இருப்பவர் டிரைவிங் லைசென்ஸை புதுப்பிக்க முடியுமா?

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, விசிட் விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பவர்கள் லைசென்ஸை புதுப்பிக்க முடியாது. அதாவது ஐக்கிய அரபு அமீரகத்தில் ரெசிடென்ஸி விசாவில் இருந்த நபர் அமீரகத்தை விட்டு வெளியேறி, விசிட் விசாவில் மீண்டும் திரும்பி வந்தால், அவர் இந்த சேவையைப் பெற முடியாது. லைசென்ஸை புதுப்பிக்க அந்த நபர் செல்லுபடியாகும் ரெசிடென்ஸி விசாவைக் கொண்டிருக்க வேண்டும்.

துபாயில் வழங்கப்பட்ட டிரைவிங் லைசென்ஸை வைத்திருப்பவருக்கு வேறு எமிரேட்டில் விசா வழங்கப்பட்டு இருந்தால் லைசென்ஸை புதுப்பிக்க முடியுமா?

RTA இன் தகவல் படி, வேறொரு எமிரேட்டில் விசா வழங்கப்பட்ட குடியிருப்பாளர்கள் துபாயில் வழங்கப்பட்ட தங்களின் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளலாம்.

மற்றொரு எமிரேட்டில் வழங்கப்பட்ட டிரைவிங் லைசென்ஸை துபாயில் புதுப்பிக்க முடியுமா?

புதுப்பிக்க முடியாது.

டிரைவிங் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள காவல்துறையினர் 24 கருப்பு புள்ளிகள் (black points) பெற்றதற்கு பிறகு ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தாலோ அல்லது இடைநீக்கம் செய்தாலோ, அதை வைத்திருப்பவர் மதிப்பீட்டு சோதனைக்கு விண்ணப்பிக்க NOC கடிதத்தைப் பெற வேண்டும். பின்னர் ஒரு புதிய பயிற்சி கோப்பு (training file) திறக்கப்படும்.

டிரைவிங் லைசென்ஸ் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியாகிவிட்டால், புதுப்பித்தல் செயல்முறை என்ன?

இத்தகைய நபர்கள் சாலை சோதனையில் (road test) தேர்ச்சி பெற்ற பின்னரே அதை புதுப்பிக்க முடியும். இதற்கு 200 திர்ஹம் செலுத்தி பயிற்சி கோப்பு (training file) திறக்க வேண்டும்; பின் 100 திர்ஹம் கற்றல் விண்ணப்பக் கட்டணம் (learning application fees); கையேடுக்கு (handbook) 50 திர்ஹம்; RTA சோதனைக்கு 200 திர்ஹம்; ஆவணத்தை புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டால் 500 திர்ஹம்; புதுப்பித்தலுக்கு 300 திர்ஹம் மற்றும்  knowledge and innovation கட்டணமாக 20 திர்ஹம் ஆகியவை செலுத்த வேண்டியிருக்கும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!