அமீரக செய்திகள்

UAE: பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்ததன் எதிரொலி..!! துபாயில் டாக்ஸி கட்டணம் உயர்வு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை என தொடர்ந்து நான்கு மாதங்களாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக துபாயில் தற்போது டாக்ஸி கட்டணமானது அதிகரித்துள்ளது.

அமீரகத்தில் மே மாதம் வெளியிடப்பட்ட எரிபொருள் விலைப்பட்டியலின் படி, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 2.71 திர்ஹம்ஸ்க்கு விற்பனையான ஒரு லிட்டர் ஸ்பெஷல் 95 இன் விலை, இப்போது லிட்டருக்கு 3.22 திர்ஹம்ஸ்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 51 ஃபில்ஸ் அதிகரித்துள்ளது.

எனவே, பெட்ரோல் விலை எழுச்சியின் விளைவாக துபாயில் டாக்ஸிகளுக்கான கட்டணம் இப்போது ஒரு கிலோமீட்டருக்கு 2.09 திர்ஹம்ஸ்களாக வசூலிக்கப்படுகிறது. இது கட்டண உயர்விற்கு முன்பு வரையிலும் ஒரு கிலோமீட்டருக்கு 1.97 திர்ஹம்ஸ் ஆக இருந்தது. எனவே இதனுடன் ஒப்பிடுகையில் தற்போது டாக்ஸி கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு 12 ஃபில்ஸ் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதாவது, உதாரணமாக அல் பர்ஷாவிலிருந்து துபாய் உலக வர்த்தக மையத்திற்கு டாக்ஸியில் செல்லும் வாடிக்கையாளர் 25 கிமீ பயணத்திற்கு சுமார் 3 திர்ஹம்ஸ் தற்போது கூடுதலாகச் செலுத்த வேண்டும். இந்த கட்டண உயர்வானது குடியிருப்பாளர்கள் பயணிக்கும் தூரத்தின் அடிப்படையில் கூடுதல் செலவிற்கு மேலும் வழிவகுக்கும்.

இந்த கட்டண உயர்வானது ஒரு கிலோமீட்டருக்கான எரிபொருள் பயன்பாட்டில் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், டாக்ஸி பயணத்திற்கான ஆரம்ப கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எவ்வாறாயினும், துபாய் மெட்ரோ, டிராம் மற்றும் பொதுப் பேருந்துகள் உட்பட பிற பொதுப் போக்குவரத்து வசதிகளின் கட்டணத்தில் மாற்றங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

கட்டண உயர்வுக்கான காரணம்:

டாக்ஸி கட்டணங்களில் ஏற்படும் எந்த மாற்றமும் உள்ளூர் சந்தையில் ஏற்ற இறக்கமான எரிபொருள் விலையின் அடிப்படையைப் பொருத்து மாறும் என்றும், இது ஒரு கிலோமீட்டருக்கு ஆகும் எரிபொருள் செலவின் அடிப்படையில் கணக்கிடப்படுவதாகவும் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) விளக்கமளித்துள்ளது.

அஜ்மான் மற்றும் ஷார்ஜாவில் கட்டண உயர்வு:

அஜ்மான் போக்குவரத்து ஆணையம் முன்னதாக இந்த ஆண்டு மார்ச் முதல் டாக்ஸி கட்டணத்தை 4 ஃபில்ஸ் உயர்த்தியுள்ளது. அஜ்மான் எமிரேட்டில் பிப்ரவரியில் 1.79 திர்ஹம்களாக இருந்த டாக்ஸி கட்டணம் மார்ச் மாதத்தில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கு 1.83 திர்ஹம்களாக உயர்த்தப்பட்டது.

ஷார்ஜாவில் டாக்ஸி கட்டண உயர்வு இல்லை என்றாலும், சமீபத்திய எண்ணெய் விலை உயர்வுகள் துபாய் மற்றும் ஷார்ஜா இடையேயான சில வழித்தடங்களையும், நகரங்களுக்கு இடையேயான விலைகளையும் பாதித்துள்ளது. மார்ச் 1 முதல் ஷார்ஜா பேருந்து கட்டணம் சில வழித்தடங்களில் 3 திர்ஹம்ஸ் அதிகரித்துள்ளது.

உதாரணமாக, ஷார்ஜாவில் உள்ள ரோல்லாவில் இருந்து அல் குவோஸ் வழியாக துபாயில் உள்ள மால் ஆஃப் எமிரேட்ஸ் வரை செல்லும் பேருந்து கட்டணம் (பஸ் ரூட் 309) கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 17 திர்ஹம்சில் இருந்து தற்போது 20 திர்ஹம்ஸ் ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!