அமீரக செய்திகள்

இந்தியா-துபாய் பயணத்தடை நீக்கம் எதிரொலி: விமான டிக்கெட் விலை உயர்வு..!!

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்க கிட்டத்தட்ட இரு மாதங்களாக தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது இந்தியாவில் இருந்து துபாய் வருவதற்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தி புதிய பயண நெறிமுறைகளை துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்குழு அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து ஜூன் 23 ம் தேதி முதல் துபாய்க்கு விமான சேவைகளை இயக்குவதாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, இந்தியாவில் இருந்து துபாய் பயணிப்பது தொடர்பான விசாரணைகள் நேற்று (சனிக்கிழமை) முதல் மிகவும் அதிகரித்துள்ளதாக பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து துபாய்க்கு பயணிக்க ஏராளமானோர் விரும்புவதால், விமான டிக்கெட் விலையானது அதிகரித்திருப்பதாக பயண முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் இருந்து துபாய் பயணிக்க 1,300 திர்ஹமிற்கும் அதிகமாக டிக்கெட் விலை இருப்பதாக கூறுகின்றனர்.

இந்தியாவில் இருந்து துபாய் வருவதற்கு பல பேர் விருப்பப்பட்டாலும், மிகக் குறைந்த பயணிகளே இந்தியாவில் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள் என்றும், தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள பயண நடைமுறைகளில் தெளிவு இல்லாததால், டிக்கெட் முன்பதிவு செய்ய தயங்குவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து பயண முகவர்கள் கூறுகையில்,  “பலர் தனது குடும்பத்தோடு துபாய் வர விரும்புவதால் அவர்களின் குழந்தைகளின் தடுப்பூசி நிலை குறித்து தெளிவு பெற விரும்புகின்றனர் மற்றும் குடியிருப்பாளர்கள் பயணத்திற்கு முன் GDRFA மற்றும் ICA ஒப்புதல்களை பெற வேண்டுமா என்பது அவர்களின் முக்கிய சந்தேகங்களாக இருக்கின்றது” என்று கூறியுள்ளனர்.

மேலும், “துபாய்க்கு பயணிக்க வேண்டியவர்கள் தடுப்பூசியின் ஒரு டோஸுடன் பயணிக்க முடியுமா என்பதை அறிய விரும்புகிறார்கள். அத்துடன் அமீரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலைக் கேட்கிறார்கள். அது மட்டுமல்லாமல் ஆறு மாதங்களுக்கும் மேலாக இந்தியாவில் இருந்தவர்கள் பலர் உள்ளனர். அவர்களின் விசா காலாவதியாகி இருப்பதால் இந்த வகை குடியிருப்பாளர்கள் இன்னும் பயணிக்க அனுமதிக்கப்படுவார்களா என்பதை அறிய விரும்புகிறார்கள்” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குழு வெளியிட்டுள்ள பயண நெறிமுறையில், பயணத்திற்கு நான்கு மணி நேரத்திற்கு முன் ரேபிட் PCR சோதனை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வசதியை விமான நிலையங்களால் மட்டுமே வழங்க முடியும் மற்றும் இந்தியாவில் பெரும்பாலான விமான நிலையங்களில் அத்தகைய வசதி இல்லை.

இவ்வாறு பல சந்தேகங்கள் பயணிகளிடையே நிலவி வருகிறது. இதற்கான தெளிவான விளக்கங்ஙகளை அமீரக அதிகாரிகள் விரைவில் வெளியிடுவார்கள் என பலரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!