ஓமான்: கின்னஸ் சாதனை படைத்த புதிதாக திறக்கப்பட்ட இரட்டை ஜிப்லைன்!! பார்வையாளர்களுக்கான நேரம் எப்போது..??

ஓமானில் புதிதாக ஜிப்லைன் திட்டத்தை ஓமான் சுற்றுலா மேம்பாட்டு நிறுவனம் தொடங்கியுள்ள நிலையில் அது கின்னஸ் சாதனையையும் கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்த்தியுள்ளது.
ஓமான் நாட்டின் சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக ஓமான் சாகச மையம் (Oman Adventure Centre) புதிதாக முசந்தம் கவர்னரேட்டில் திறக்கப்பட்டுள்ளது. ஓமானில் உள்ள 1,800 மீட்டருக்கும் அதிகமான நீளமுள்ள இந்த இரட்டை ஜிப்லைனை் (zipline) உலகின் மிக நீளமான ஜிப்லைன் என்றும் இதில் பார்வையாளர்கள் சாகச ரைடினை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இங்கு உலகின் மிக நீளமான ஜிப்லைன் உடன் கூடுதலாக பல சாகச மற்றும் பொழுதுபோக்கு செயல்பாடுகளும், விளையாட்டு ரசிகர்களுக்காக உள்ளூர் போட்டிகள் நடத்தப்படும் பேடல் கோர்ட்டுகள் போன்றவை வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, பார்வையாளர்களின் அனுபவத்தை மேலும் அதிரடியாக்க எதிர்காலத்தில் கடல் மற்றும் மலை சாகச நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, ஓமான் அட்வென்ச்சர்ஸ் மையம், உத்தியோகபூர்வ விடுமுறை நாட்கள் உட்பட வாரம் முழுவதும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும், ஜிப்லைனை முயற்சிக்க விரும்புபவர்கள் https://omanadventures.com/ என்ற லிங்க்கை கிளிக் செய்து முன்பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.