வளைகுடா செய்திகள்

குவைத்தில் ஒரு மணி நேரத்திற்கு 8 சாலை விபத்துகள் நடப்பதாக அதிர்ச்சித் தகவல்!! – மரணத்திற்கு வழிவகுக்கும் அலட்சியமும் அதிவேகமும்…

குவைத் சாலைகளில் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 8 சாலை விபத்துகள் நிகழ்வதாகத் அதிர்ச்சிகரத் தரவுகள் வெளியாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலான விபத்துகள், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், மொபைல் போன் பயன்படுத்துதல் போன்ற அலட்சியமான நடத்தைகளால் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி, ஒவ்வொரு மாதமும் சராசரியாக 5,800 சாலை விபத்துகள் பதிவாகின்றன. இது ஒரு நாளைக்கு சுமார் 193 விபத்துகளுக்கு சமமாகும். இது போல, இந்தாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 29,000 விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

மேலும், இந்த சாலை விபத்துகளில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் என 135 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவ்வாறு சராசரியாக மாதந்தோறும் 27 பேர் உயிரிழப்பது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சாலைகளில் கவனக்குறைவைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த திட்டம் உடனடியாகத் தேவைப்படுவதை அமைச்சகத்தின் ஆதாரங்கள் உயர்த்திக் காட்டுகின்றன.

எனவே, சாலைகளில் அதிக வேகம், சிவப்பு விளக்குகளை அலட்சியம் செய்து கடத்தல், உயிர் இழப்பு மற்றும் கடுமையான காயங்களுக்கு வழிவகுக்கும் பிற காரணிகள் ஆகியவை திறம்படத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. கூடவே, போக்குவரத்துச் சட்டங்களைத் திருத்தி கடுமையான அபராதங்களை அமல்படுத்துவது ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அமைச்சக வட்டாரங்கள் எடுத்துரைத்துள்ளன.

அதுமட்டுமின்றி, குவைத்தில் 2.4 மில்லியனுக்கும் அதிகமான கார்கள் இருப்பதாகவும், 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மட்டும் ஏறத்தாழ 1.6 மில்லியனுக்கும் அதிகமான செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், அதிகப்படியான சாலை விபத்துகளுக்கான ஆறு முக்கிய காரணங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன: அவையாவன;

  1. கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல்
  2. மொபைல் போன் பயன்படுத்திக் கொண்டே வாகனம் ஒட்டுதல்,
  3. தவறான பாதையில் முந்திச் செல்வது
  4. வாகனத்தை பராமரிக்கத் தவறியது
  5. அலட்சியம் மற்றும் அதிவேகம்
  6. பள்ளங்கள் மற்றும் சேதமான ஆபத்தான சாலை நிலைமைகள்

சாலை விபத்துகளைத் தவிர்க்க, பொதுப் போக்குவரத்துத் துறையால் தொடர்ச்சியான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மரணத்திற்கு வழிவகுக்கக் கூடிய சாலை விபத்துகள் பெரும்பாலும் விதிகளை மீறிய இளைஞர்களால் நடப்பதாகக் கூறப்படுகிறது.

அதுபோல, மது அருந்திவிட்டு போதையில் வாகனம் ஓட்டுவதால், ஓட்டுநர்கள் சிவப்பு விளக்குகளைத் தாண்டி தங்கள் உயிருக்கும் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கின்றனர் என்பதும் சாலை விபத்துகள் தொடர்பான புள்ளி விபரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!