வளைகுடா செய்திகள்

ஓமானில் தனியார் துறை ஊழியர்களுக்கு உரிய தேதியில் சம்பளம் வழங்க அதிரடி நடவடிக்கை.. காலக்கெடுவையும் நிரணயித்த அரசு..!!

ஓமானில் உள்ள தனியார் துறை நிறுவனங்களில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் எலெக்ட்ரானிக் ஊதிய பாதுகாப்பு முறையை (WPS) நடைமுறைப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது. தொழிலாளிகளுக்கு உரிய நேரத்தில் முதலாளி அல்லது நிறுவனமானது ஊதியங்களை செலுத்துகின்றனவா என்பதனை உறுதிபடுத்தவும் விதிமீறல்களைக் கண்டறியவும் இந்த முறையானது பயன்படுகிறது.

இது குறித்து ஓமானின் தொழிலாளர் அமைச்சகம் (MoL) வெளியிட்ட சுற்றறிக்கையில், தனியார் துறை நிறுவனங்களில் WPS முறையை செயல்படுத்துவதற்கான காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓமான் அமைச்சரவை ஆணை எண் (299/2023) இன் படி, நாட்டின் அனைத்து தனியார் துறை நிறுவனங்களும் ஊதிய பாதுகாப்பு முறையை செயல்படுத்துவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆகவே, தனியார் துறை நிறுவனங்கள் அனைத்தும் வரும் ஜூலை 10, 2023 முதல் WPS செயல்முறையை செயல்படுத்த வேண்டும் என்றும் மேலும், அமைச்சரவை குறிப்பிட்டுள்ள காலக்கெடுவானது, வெவ்வேறு நிறுவன பிரிவுகளை பொறுத்து எட்டு முதல் ஆறு மாதங்கள் வரை மாறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பெரிய அளவிலான மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் அவற்றின் நிலையை WPS உடன் சீரமைக்க ஆறு மாதங்களும், சிறு மற்றும் குறு வணிக நிறுவனங்களுக்கு எட்டு மாதங்களும் குறிப்பாக இந்த நிறுவனங்கள் தங்கள் 50 சதவீதம் நிலையை திருத்தம் செய்ய நான்கு மாதங்களும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

WPS எனும் ஊதிய பாதுகாப்பு முறையானது, தொழிலாளர்களுக்கு நியாயமான மற்றும் சமமான பணியிடத்தை உறுதி செய்வதுடன் தாமதமின்றி நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் ஊதியத்தைப் பெற அனுமதிக்கிறது.

இவ்வாறு தாமதமின்றி சரியான நேரத்தில் துல்லியமான ஊதியத்தை வழங்குவதன் மூலம், ஊழியர்களின் ஒப்பந்தங்களில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள விதிமுறைகளுடன் ஒத்துப்போக உதவி புரிவதாக கூறப்படுகின்றது. இது முதலாளி மற்றும் தொழிலாளர்களிடையே சுமூகமான உறவையும் நம்பிக்கையையும் மேம்படுத்துகிறது.

புதிய WPS விதிமுறைகளின் படி, முதலாளிகள் ஊழியர்களின் ஊதியத்தை உரிய தேதியிலிருந்து அதிகபட்சம் ஏழு நாட்களுக்குள் அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்த வேண்டும். இந்த செயல்முறையை திறம்பட செயல்படுத்துதல் மற்றும் இணக்கத்தை உறுதி செய்வதற்காக, அமைச்சகமானது எலெக்ட்ரானிக் அமைப்பை மேற்பார்வையிடும் மற்றும் தனியார் துறையில் ஊதியம் முறையாக வழங்கப்படுவதைக் கண்காணிக்கும் என கூறப்படுகின்றது.

ஒருவேளை ஊழியர்களின் ஊதியத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், முதலாளிகள் உடனடியாக அமைச்சகத்திற்குத் தெரிவிக்க வேண்டும். இந்த நடவடிக்கை வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிக்கிறது.

அபராதம்:

புதிதாக அமல்படுத்தப்பட்ட இந்த WPS விதிமுறைகளுக்கு இணங்காமல் இருந்தால், அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆரம்பத்தில் இந்த விதிகளை மீறுபவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்படும் என்றும், அதைத்தொடர்ந்து பிரிலிம்னெரி பணி அனுமதி தொடர்பான சேவைகள் நிறுத்தப்படும். மீண்டும் மீண்டும் மீறினால் 50 ரியால் நிர்வாக அபராதம் விதிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்தடுத்த குற்றங்களுக்கு இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விதிவிலக்குகள்:

நிறுவனங்களில் WPS இன் பயன்பாடு கட்டாயமாக இருந்தாலும், சில விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வேலை நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் தொழிலாளர் தகராறு வழக்குகள், சட்டப்பூர்வ நியாயம் இல்லாமல் தானாக முன்வந்து வேலையை நிறுத்துதல், ஆரம்ப 30 நாட்களுக்குள் புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதல் மற்றும் ஊதியம் இல்லாத விடுப்பில் உள்ள ஊழியர்கள் போன்ற செயல்பாடுகளுக்கு இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!