அமீரக செய்திகள்

மீண்டும் கோலாகலமாக துவங்கப்படவிருக்கும் ஷேக் சையத் ஹெரிடேஜ் ஃபெஸ்டிவல்..!! குடியிருப்பாளர்களுக்காக இலவச பேருந்து சேவைகள் அறிமுகம்..!!

அபுதாபியில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஷேக் சையத் ஹெரிடேஜ் பெஸ்டிவல், இந்த வருடம் வரும் வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி அடுத்த வருடம் பிப்ரவரி 20 வரை அபுதாபியில் உள்ள அல் வத்பாவில் நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹெரிடேஜ் ஃபெஸ்டிவல் தொடங்கவிருப்பதை முன்னிட்டு, அங்கு செல்ல விரும்பும் குடியிருப்பாளர்களுக்காக இலவச இலவச பொது பேருந்து சேவைகள் வழங்கப்படும் என்று அபுதாபியின் போக்குவரத்து அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

செவ்வாயன்று, அபுதாபியில் உள்ள நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) பார்வையாளர்களை விழா நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்வதற்கான ஒரு “விரிவான திட்டத்தை” அமைத்துள்ளதாகக் கூறியுள்ளது.

ITC இது குறித்து தெரிவிக்கையில், அபுதாபியில் உள்ள பிரதான பேருந்து நிலையத்தில் (main bus station) தினமும் இலவச பேருந்து சேவைகள் கிடைக்கும் என்றும், இது பெயின் அல் ஜெஸ்ரைன் கூட்டுறவு சங்கத்தின் சூப்பர் மார்க்கெட்டுக்குச் (Bain Al Jessrain Co-operative Society Supermarket) செல்லும், பின்னர் அங்கிருந்து அது பனியாஸ் பேருந்து நிலையத்திற்கும் (Bani Yas Bus Station), இறுதியாக ஷேக் சையத் ஹெரிடேஜ் ஃபெஸ்டிவல் நடைபெறும் இடத்திற்குச் செல்லும் என்றும் தெரிவித்துள்ளது.

தினமும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பேருந்துகள் கிடைக்கும் என்றும் அதே போல், மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை ஒவ்வொரு மணி நேரமும் விழா நடைபெறும் இடத்தில் இருந்து பார்வையாளர்கள் திரும்புவதற்காகவும் இலவச பேருந்து சேவைகள் (Return services) கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

‘எமிரேட்ஸ், நாகரிகங்கள் சங்கமிக்கும் இடம்’ என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறுகின்ற மூன்று மாத விழாவில் அல் வாத்பா 3,500 செயல்பாடுகளை வழங்கும் என்று அமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விழாவில் 30 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன. அந்நாடுகளின் கலாச்சாரம், உணவு வகைகள் என பலவற்றை நேரடியாக நாம் காணலாம். மேலும், இரவில் வான வேடிக்கைகளும் அங்கு நிகழ்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அங்கு மேற்கொள்ளப்படும் என்று விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஷேக் சையத் ஹெரிடேஜ் ஃபெஸ்டிவல் ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய கலாச்சார விழாக்களில் ஒன்றாகும், இது சமீபத்தில் உலகின் மிக முக்கியமான ஐந்து கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு நாளைக்கு 80,000 பார்வையாளர்களை வரவேற்கும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு நுழைவதற்கு கட்டணமாக 5 திர்ஹம் வசூலிக்கப்படும். அதே நேரத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவுக்கட்டணம் ஏதும் இல்லை என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

சிறப்பம்சங்கள்

> வான வேடிக்கை: ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சரியாக இரவு 7.55 மணிக்கு அந்த இடத்தின் கேட் எண் 2 க்கு அருகில் வான வேடிக்கை நிகழ்த்தப்படும். அதை தவிர்த்து அமீரக தேசிய தினம் மற்றும் புத்தாண்டு தினத்திலும் வான வேடிக்கைகள் நிகழ்த்தப்படும்.

> கார் ஷோ: இது கிளாசிக் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட பல்வேறு வகையான கார்களை பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். வின்டேஜ் கார் முதல் நவீன கார்கள் வரை இங்கு நாம் காணலாம்.

> சாகச நிகழ்ச்சிகள்: இதில் மான்ஸ்டர் டிரக் (monster trucks) மற்றும் மோட்டார் சைக்கிள்களின் (motorcycles) சாகச விளையாட்டுகள் இடம்பெறும்.

> எமிரேட்ஸ் பவுண்டைன்: ஒரு அருமையான பவுண்டைன் ஷோ-விற்காக மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

> ஃபுட் டிரக்: சிறந்த உள்ளூர் மற்றும் சர்வதேச உணவகங்கள் இங்கு கிடைக்கும்.

 

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!