அமீரக செய்திகள்

வெளிநாட்டினருக்கும் அமீரக குடியுரிமை, பாஸ்போர்ட் வழங்கும் அமீரகம்.. யாருக்கு..? நிபந்தனைகள் என்ன..? முழு விபரம் உள்ளே..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியுரிமை சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்து வெளிநாட்டவர்களும் அமீரக குடியுரிமை பெறலாம் என்று அமீரக அரசானது கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. அமீரக அரசின் இந்த அறிவிப்பின் படி, முதலீட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள், சிறப்புத் திறமையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் குறிப்பிட்ட சில நிபந்தனைகளின் கீழ் அமீரக நாட்டின் குடியுரிமை மற்றும் அமீரக பாஸ்போர்ட்டைப் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு பங்களிக்கும் வகையில் அறிவாற்றல் மிக்க வல்லுநர்களை அமீரக சமூகத்தின் பக்கம் ஈர்ப்பது மற்றும் அமீரகத்தில் உள்ள வெளிநாட்டவர்களின் திறமைகள் மற்றும் திறன்களைப் பாராட்டுவது போன்றவற்றை நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கையை அமீரக அரசு எடுத்துள்ளது.

அமீரக அரசின் இந்த திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின் படி, அமீரக குடியுரிமை மற்றும் அமீரக பாஸ்போர்ட் பெற தகுதியுடையவர்கள் யார்..? குடியுரிமை பெறுவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்ன..? அமீரக குடியிருப்பாளர்கள் விண்ணப்பிக்க முடியுமா..? இது போன்ற கேள்விகளுக்கான பதில்களை கீழே காண்போம்.

அமீரக குடியுரிமை பெற தகுதியானவர்கள் யார்..?
  • முதலீட்டாளர்கள்
  • மருத்துவர்கள்
  • வல்லுநர்கள்
  • கண்டுபிடிப்பாளர்கள்
  • விஞ்ஞானிகள்
  • திறமைசாலிகள்
  • அறிவாற்றல் மிக்கவர்கள்
  • கலைஞர்கள்
  • மற்றும் மேலே உள்ள அனைத்து வகைகளின் குடும்ப உறுப்பினர்கள்
குடியுரிமை பெறுவதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் என்ன..?

>> முதலீட்டாளர்கள்

முதலீட்டார்கள் குடியுரிமை பெறுவதற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் சொந்தமாக ஒரு சொத்து வைத்திருக்க வேண்டும்.

>> மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள்

மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் குடியுரிமை பெற, ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகவும் தேவைப்படும் தனித்துவமான அறிவியல் துறை அல்லது வேறு ஏதேனும் துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தனது நிபுணத்துவத் துறையில் ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் உறுப்பினராக இருப்பதுடன், அறிவியல் பங்களிப்புகள், ஆய்வுகள் மற்றும் அறிவியல் மதிப்பின் ஆராய்ச்சி மற்றும் 10 ஆண்டுகளுக்கு குறையாத நடைமுறை அனுபவம் போன்றவற்றை கொண்டவராக இருக்க வேண்டும்.

>> விஞ்ஞானிகள்

விஞ்ஞானிகள் அமீரகத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் அல்லது ஆராய்ச்சி மையம் அல்லது தனியார் துறையில் தீவிர ஆராய்ச்சியாளராக இருக்க வேண்டும், அதே துறையில் 10 ஆண்டுகளுக்கு குறையாத நடைமுறை அனுபவத்துடன் இருக்க வேண்டும். மதிப்புமிக்க அறிவியல் விருதை வெல்வது அல்லது கடந்த 10 ஆண்டுகளில் அவர்களின் ஆராய்ச்சிக்கு கணிசமான நிதியைப் பெறுவது போன்ற அறிவியல் துறையில் அவர்கள் பங்களிப்புகளையும் கொண்டிருக்க வேண்டும். அமீரகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் நிறுவனங்களிடமிருந்து பரிந்துரை கடிதத்தைப் பெறுவதும் கட்டாயமாகும்.

>> கண்டுபிடிப்பாளர்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகம் அல்லது பிற புகழ்பெற்ற சர்வதேச அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காப்புரிமைகளை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக பொருளாதார அமைச்சகத்தின் பரிந்துரை கடிதத்தையும் வைத்திருக்க வேண்டும்.

>> படைப்பாற்றல் திறமைகள்

அறிவார்ந்தவர்கள் மற்றும் கலைஞர்கள், கலாச்சாரம் மற்றும் கலைத் துறைகளில் முன்னோடிகளாகவும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்றவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும் இந்த துறை சார்ந்த அரசு நிறுவனங்களின் பரிந்துரைக் கடிதமும் கட்டாயம்.

அமீரகத்தில் வசிக்கும் ஒரு குடியிருப்பாளர் குடியுரிமை பெற முடியுமா..?

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின்படி, அமீரக குடியுரிமை பெறுவது என்பது, அமீரக ஆட்சியாளர்கள் மற்றும் பட்டத்து இளவரசர்களின் நீதிமன்றங்கள், நிர்வாக கவுன்சில்கள் மற்றும் கூட்டாட்சி நிறுவனங்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமைச்சரவை மூலம் வழங்கப்படும்

அமீரக குடியுரிமையால் பெரும் நன்மைகள் என்ன..?

ஐக்கிய அரபு அமீரக குடியுரிமை பெற்றவர்கள் நாட்டிற்குள் வணிக நிறுவனங்கள் மற்றும் சொத்துக்களை நிறுவலாம். மேலும் அவரின் சொத்துக்களை சொந்தமாக வைத்திருக்கும் முழு உரிமையையும் பெறலாம்.

அமீரக குடியுரிமையை பெறுபவர் தனது சொந்த நாட்டு குடியுரிமையை தக்க வைத்துக் கொள்ள முடியுமா..?

ஆம். தக்கவைத்து கொள்ள முடியும்.

அமீரக குடியுரிமை வழங்கப்பட்ட பிறகு அது ரத்து செய்யப்பட வாய்ப்பு உண்டா..?

குடியுரிமை சட்ட திருத்தங்களின்படி, குடியுரிமை தொடர்பான அரசின் நிபந்தனைகளை மீறினால் வழங்கப்பட குடியுரிமை திரும்பப் பெறப்படலாம்.

பிற தேவைகள் ஏதேனும் உண்டா..?

குடியுரிமை பெற ஒருவர் தகுதி பெற்றால், அவர் அமீரக சட்டங்களுக்கு கட்டுப்படுவதை உறுதி செய்தல், நாட்டிற்கு விசுவாசமாக இருப்பதாக பிரமாணம் செய்தல் மற்றும் வேறு ஏதேனும் குடியுரிமையைப் பெற்றாலோ அல்லது இழந்தாலோ அந்தந்த அரசு நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தல் ஆகியவையும் அடங்கும்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!