அமீரக செய்திகள்

துபாய்: எக்ஸ்போ 2020-ல் நாளை இசை நிகழ்ச்சியை நடத்தும் AR ரஹ்மான்..!! முதலில் வருவோர்க்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி..!!

துபாயில் கடந்த அக்டோபர் 1 முதல் தொடங்கி நடைபெற்று வரும் எக்ஸ்போ 2020 நிகழ்வில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆஸ்கார் விருது மற்றும் கிராமி விருது பெற்ற இசையமைப்பாளர் AR ரஹ்மானின் “ஃபிர்தவுஸ் ஆர்கெஸ்ட்ரா”இசை நிகழ்ச்சி, நாளை அக்டோபர் 23 சனிக்கிழமையன்று மாலை 7 மணிக்கு தொடங்கப்படவுள்ளது.

ஃபிர்தவுஸ் ஆர்கெஸ்ட்ரா என்பது இசைப்புயல் AR ரஹ்மானின் தலைமையில் உலகின் பல நாடுகளை சேர்ந்த இசை திறமையுள்ள பெண்களை மட்டுமே கொண்டு நடத்தப்படவுள்ள ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சியாகும்.

எக்ஸ்போ 2020 துபாயில் அக்டோபர் 17 முதல் அக்டோபர் 23 வரையிலான ஒரு வார காலத்திற்கு நடைபெற்று வரும் “ஸ்பேஸ் வீக்” எனும் விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான நிகழ்வுகளின் இறுதி நாளில் ஃபிர்தவுஸ் ஆர்கெஸ்ட்ரா இசை கச்சேரியை AR ரஹ்மான் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இசை கச்சேரியானது ஒரு மேற்கத்திய கிளாசிக்கல் இசை மற்றும் ரஹ்மானின் அசல் இசையை உள்ளடக்கிய விண்வெளியை மையமாக கொண்ட தீமில் வழங்கப்படவுள்ளது.

எக்ஸ்போ 2020 இன் ஜூபிலி பூங்காவில் இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ள ஃபிர்தவுஸ் ஆர்கெஸ்ட்ரா, யாஸ்மினா சப்பா தலைமையில் அரபு உலகம் முழுவதிலுமிருந்து பங்குபெறும் பெண்களின் இசை திறமைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு இசை நிகழ்ச்சியாகும்.

ஒரு மணி நேரம் நடக்கவுள்ள இந்த நிகழ்ச்சியில் சில மேற்கத்திய இசை நிகழ்ச்சிகளுக்கு பிறகு இறுதியாக மனிதநேயம் மற்றும் விண்வெளி ஆய்வாளர்களுக்கு முன்மாதிரியாக ‘அல் அமல்’ என்ற தீமில் ஒரு பிரத்யேகமான புத்தம் புதிய இசையமைப்பை AR ரஹ்மான் வழங்கவுள்ளார் என்பதும் சிறப்புக்குரியது.

இது குறித்து AR ரஹ்மான் கூறுகையில் “தெரியாததை அறிவது வாழ்க்கையின் தேடலாகும், மேலும் விண்வெளியை ஆராய்வதன் மூலம் நம்மை நாமே ஆராய்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.

‘அல் அமல்’ என்ற அரபு வார்த்தைக்கான அர்த்தம் ஆங்கிலத்தில் ‘Hope – ஹோப் (நம்பிக்கை)’ என்பதாகும். மேலும் அரபுலகில் முதன் முதலாக செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பிய அமீரகத்தின் முதல் விண்கலத்தின் பெயரும் கூட ஹோப் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை சனிக்கிழமை நடக்கவுள்ள இந்த ஆர்கெஸ்ட்ராவின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் எக்ஸ்போ டிக்கெட் வைத்திருப்பவர்கள் நிகழ்ச்சிக்கு சீக்கிரம் வர வேண்டும் எனவும், அரங்கில் குறைந்த திறனில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட இருப்பதால், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் எனவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!