அமீரக செய்திகள்

Big News: கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் நீக்கம்..!! இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் இயல்புக்கு திரும்பிய அமீரகம்.!!

ஐக்கிய அரபு அமீரக அரசானது கொரோனாவிற்காக விதிக்கப்பட்டிருந்த முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கடந்த சில மாதங்களாக தளர்த்தி வந்த நிலையில் தற்பொழுது கொரோனாவிற்கான அனைத்து கட்டுப்பாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவானது நாளை நவம்பர் 7 காலை 6 மணி முதல் அமலுக்கு வருவதாகவும் தகவல் கூறப்பட்டுள்ளது.

இந்த புதுப்பிக்கப்பட்ட விதிகளை தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) கொரோனா புதுப்பிப்புகள் குறித்த சிறப்பு ஊடக சந்திப்பில் அறிவித்துள்ளது. அமீரகத்தில் முதல் கொரோனா நோய்த்தொற்று கடந்த ஜனவரி 29, 2020 அன்று கண்டறியப்பட்டது. மேலும் கொரோனாவிற்கான கட்டுப்பாடுகள் அறவிக்கப்பட்ட கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் இந்த கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய அறிவிப்பின்படி அமீரகத்தில் உள்ள மசூதிகள் மற்றும் பிற வழிபாட்டு தலங்கள் உட்பட ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள அனைத்து வெளிப்புற மற்றும் உட்புற பகுதிகளிலும் முக கவசங்கள் அணிவது விருப்பமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மையங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.

மேலும் Al Hosn அப்ளிகேஷனானது இனி தடுப்பூசி சான்றிதழ்கள் மற்றும் PCR சோதனைகளின் முடிவுகளை அமீரகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கோரிக்கையின் பேரில் நிரூபிக்க மட்டுமே பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பொது இடங்களுக்குள் நுழைய அல் ஹோஸன் அப்ளிகேஷனில் இனி கிரீன் பாஸ் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து NCEMA தெரிவிக்கையில் “கொரோனாவிற்கான PCR சோதனை மற்றும் சுகாதார மையங்கள் தொடர்ந்து செயல்படும். மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தல் காலம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்” என கூறியுள்ளது.

மேலும் கூறுகையில், “விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளைப் பொறுத்தவரை, தேசிய மற்றும் உள்ளூர் மட்டங்களில் உள்ள அமைப்புக்கள், செயல்பாட்டின் வகை அல்லது முக்கியத்துவத்திற்கு ஏற்ப முன் கூட்டிய சோதனை அல்லது தடுப்பூசி சான்றிதழ்களைக் கோரலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதைத் தொடர்ந்து இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த செப்டம்பர் 28 அன்று, பொது இடங்கள் மற்றும் பள்ளிகளில் முக கவசங்கள் அணிவது விருப்பத்திற்கு உட்பட்டது, ஆனால் மருத்துவ மையங்கள், மசூதிகள், பொது போக்குவரத்து ஆகியவற்றில் கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் விமான பயணிகள் முக கவசம் அணிவது தொடர்பான விதிமுறைகளை அந்தந்த விமான நிறுவனங்களே முடிவு செய்யும் எனவும் மசூதிகளில் சமூக விலகல் தேவையில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. பின், தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு கிரீன் பாஸ் செல்லுபடியாகும் காலம் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அமீரக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 100 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகவும் உலகளவில் அதிகளவு மக்கள் தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில் அமீரகமும் ஒன்றாகும் என்பதும் கவனிக்கத்தக்கது.

NCEMA அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் Dr சைஃப் அல் தஹேரி கூறுகையில் “ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் கடந்த காலத்தில் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டது, இதன் விளைவாக தொற்றுநோய்கள் மற்றும் நோய்களை எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும் “சுகாதாரத் துறை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புடன், சுகாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான அதன் முயற்சிகளை அமீரகம் தீவிரப்படுத்தியது. கடந்த மூன்று ஆண்டுகளில் எங்கள் அனைவரின் ஒற்றுமை அனைத்து சமூக உறுப்பினர்கள், குறிப்பாக மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பில் அதிக ஈடுபாடைக் காட்டியது” என்றும் கூறியுள்ளார்.

தொற்றுநோயைக் கையாள்வதில் அமீரகத்தின் புத்திசாலித்தனமான தலைமையின் வழிகாட்டுதல்கள் மற்றும் தொலைநோக்கு பார்வை, அத்துடன் ஒவ்வொரு சமூக உறுப்பினரின் சமூக முயற்சிகள் மற்றும் சுய-பொறுப்பு ஆகியவை இந்த நிலையை எட்ட காரணம் என்றும் அதற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Related Articles

Back to top button
error: Content is protected !!