அமீரக செய்திகள்

துபாய்: இ-ஸ்கூட்டர் பயன்பாட்டிற்காக பிரத்யேக பாதை.. 2022 முதல் 10 மாவட்டங்களில் ஓட்டலாம்..!! முதல் கட்ட பணிகளை துவங்கிய RTA .!!

ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் வரும் 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து, துபாயில் உள்ள பத்து மாவட்டங்களில் இ-ஸ்கூட்டர்களை ஓட்டலாம் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

துபாயில் பயணிகள் போக்குவரத்தில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வரும் RTA, தற்போது இ-ஸ்கூட்டர் பயன்பாடு குடியிருப்பாளர்களிடையே அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு அதற்கென பிரத்யேக வழித்தடங்களை சிறந்த பாதுகாப்பு கட்டமைப்புடன் செயல்படுத்தி வருகிறது. இதற்காக கடந்த அக்டோபர் 2020 ல் தொடங்கிய சோதனைக் கட்டத்தில், முதலில் ஐந்து மாவட்டங்களில் மட்டுமே இ-ஸ்கூட்டர்களைப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 10 துபாய் மாவட்டங்களை உள்ளடக்கி 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் செயல்படத் தொடங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் செயல்பாட்டின் உள்கட்டமைப்பிற்கான திட்டத்தின் சிவில் தளப் பணிகளை RTA தொடங்குவதாக, சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவர் மத்தர் முகமது அல் தயர் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளார்.

மேலும் RTA, துபாயின் குறிப்பிட்ட குடியிருப்பு பகுதிகளில் இ-ஸ்கூட்டர்களின் பயன்பாடு மற்றும் தடங்களை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும், பின்னர் 23 புதிய மாவட்டங்களில் இரண்டாம் கட்டமாக இப்பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் “இந்த திட்டத்தின் ஆரம்ப கட்டம் ஷேக் முகமது பின் ரஷீத் பவுல்வர்டு, ஜுமேரா லேக்ஸ் டவர்ஸ், துபாய் இன்டர்நெட் சிட்டி, அல் ரிக்கா, டிசம்பர் 2வது ஸ்ட்ரீட் (குறிப்பிடப்பட்ட தடம் மற்றும் மண்டலம்), தி பாம் ஜுமேரா மற்றும் சிட்டி வாக் ஆகியவற்றை உள்ளடக்கியது. மேலும் அல் குசைஸ், அல் மன்ஹூல் மற்றும் அல் கராமா பகுதிகளில் உள்ள பாதுகாப்பான சாலைகள் மற்றும் சைக் அல் சலாம், அல் குத்ரா மற்றும் மெய்டன் ஆகிய சைக்கிள் ஓட்டுதல் தடங்களைத் தவிர மற்ற பிற பகுதிகளில் உள்ள சைக்கிள் ஓட்டும் தடங்களையும் உள்ளடக்கியது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இ-ஸ்கூட்டர் பயன்பாட்டிற்கான மாவட்டங்களின் தேர்வானது அதிக மக்கள் தொகை அடர்த்தி, சிறப்பு வளர்ச்சிப் பகுதிகள், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் வெகுஜனப் போக்குவரத்தால் வழங்கப்படும் பகுதிகள், ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அதிக போக்குவரத்து பாதுகாப்பு உள்ள பகுதிகள் போன்ற குறிப்பிட்ட அளவுகோல்களால் வழிநடத்தப்படுகிறது என்றும் அவர் விளக்கியுள்ளார்.

“துபாயில் ஒருங்கிணைந்த மற்றும் திறமையான போக்குவரத்து வலையமைப்பை வழங்குவதன் மூலம் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்ற குடியிருப்பாளர்களுக்கு RTA அழைப்பு விடுக்கிறது. சிறந்த சர்வதேச நடைமுறைகளுக்கு இணங்க பயனர்களுக்கு பல போக்குவரத்து விருப்பங்களை வழங்குவதில் துபாய் முன்னணி நாடுகளில் ஒன்றாக இருப்பதற்கும் RTA முயல்கிறது” என்றும் முகமது அல் தயர் கூறியுள்ளார்.

கடந்த அக்டோபர் 2020 ல் தொடங்கப்பட்ட சோதனை கட்டத்திலிருந்து கடந்த செப்டம்பர் 2021 வரை துபாயில் சுமார் அரை மில்லியன் பயணங்களை இ-ஸ்கூட்டர்கள் செய்துள்ளதாக RTA தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!