அமீரக சட்டங்கள்

உங்களின் குடும்பத்தினரை ஃபேமிலி விசாவில் அமீரகம் அழைத்து வர விருப்பமா..?? முழுமையான ஆன்லைன் செயல்முறை இதோ..!!

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்காக ஸ்பான்சர் செய்து நுழைவு அனுமதி (Entry Permit) பெற விரும்பினால் அதற்காக நீங்கள் டைப்பிங் சென்டர் (Typing Center) செல்ல தேவையில்லை. ஆன்லைன் மூலமாகவே எளிதில் விசாவினைப் பெற்றுக்கொள்ளலாம். அது குறித்த செயல்முறைகளை படிப்படியாக கீழே காணலாம்.

அமீரகத்தின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், அமீரக குடியிருப்பாளர்கள் தாங்கள் ஸ்பான்சர் செய்ய விரும்பும் குடும்பத்தினருக்காக நுழைவு அனுமதியினை ICA வலைத்தளம் மூலமாகவோ அல்லது ICA அப்ளிகேஷன் வழியாகவோ பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

நுழைவு அனுமதி (Entry Permit), விசா நிலையினை மாற்றுதல் (Change Visa Status) மற்றும் விசாவிற்கான ஸ்டாம்ப் பெறுதல் (Visa Stamping) போன்ற அனைத்து வகையான செயல்முறைகளையும் ஆன்லைன் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு ரெசிடென்ஸ் விசா எடுக்க விரும்பினால் பின்வரும் செயல்முறைகளை முறையாகக் கடைபிடிக்க வேண்டும்.

படி- 1: ஆன்லைன் போர்ட்டலில் பதிவு செய்தல் (Register with the Online Portal)

ICA வலைத்தளத்திலோ அல்லது ICA அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்தோ அதில் சென்று தனக்கான கணக்கை தொடங்க user name மற்றும் password கொடுத்து துவங்க வேண்டும். ஒரு வேளை, நீங்கள் UAEPASS அப்ளிகேஷன் பயன்படுத்துபவராக இருந்தால் அதன் மூலமாகவும் நீங்கள் சேவைகளை பெறலாம்.

படி- 2: ஸ்பான்சர் ஃபைலை பதிவு செய்தல் (Sponsor File Registration)

ஸ்பான்சர் ஃபைலை பதிவு செய்வதற்கு கீழ்க்கண்ட ஆவணங்களை சமர்ப்பித்து பதிவு செய்வதற்கு கட்டணமாக 225 திர்ஹம்ஸ் பணம் செலுத்த வேண்டும். மேலும், ஆவணங்கள் அனைத்தும் வண்ண நகலாக jpg அல்லது pdf முறையில் ஆன்லைனில் பதிவேற்றம் (upload) செய்ய வேண்டும்.

  • ஸ்பான்சர் (உங்களின்) பாஸ்போர்ட் மற்றும் விசா நகல்
  • ஸ்பான்சர் (உங்களின்) எமிரேட்ஸ் ஐடி நகல்
  • சம்பள சான்றிதழ் (நீங்கள் அரசுத்துறை அல்லது ஃபிரீ சோனில் (free zone) பணிபுரியும் நபராக இருந்தால்) அல்லது தொழிலாளர் ஒப்பந்தம் (தனியார்துறை ஊழியராக இருந்தால்)

படி- 3: நுழைவு அனுமதிக்கு விண்ணப்பித்தல் (Apply for an Entry Permit)

Residence Permit issuance services என்பதை தேர்வு செய்து அதில் கீழ்க்கண்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  • ஸ்பான்சர் பாஸ்போர்ட் மற்றும் விசா நகல்
  • ஸ்பான்சர் எமிரேட்ஸ் ஐடி நகல்
  • சம்பள சான்றிதழ் அல்லது தொழிலாளர் ஒப்பந்தம்
  • சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்புடன் கூடிய (Attested with legal translation) திருமண சான்றிதழ்
  • சான்றளிக்கப்பட்ட மொழிபெயர்ப்புடன் கூடிய (Attested with legal translation) பிறப்பு சான்றிதழ்
  • இஜாரி (Ejari) அல்லது குத்தஹை ஒப்பந்தம் (tenancy contract)
  • குடும்பத்தினரின் பாஸ்போர்ட் நகல்குடும்பத்தினரின் புகைப்படம் (வெள்ளை பின்புறத்தில் எடுக்கப்பட்டது)

மேற்குறிப்பிட்டிருக்கும் ஆவணங்களை பதிவேற்றம் செய்து நுழைவு அனுமதிக்கான கட்டணமாக 306 திர்ஹம்ஸ் செலுத்த வேண்டும். ஆவணங்களை சமர்ப்பித்து கட்டணம் செலுத்தியவுடன் உங்களுக்கு நுழைவு அனுமதியானது மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும்.

படி- 4: விசா நிலையினை மாற்றுதல் (Change Status)

விசா நிலையினை ஆன்லைனில் மாற்றுவதற்கு கீழ்க்கண்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

  • தற்போதைய சுற்றுலா விசாவின் நகல் அல்லது ரத்து செய்வதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்ட கடிதத்தின் நகல்
  • புதிய நுழைவு அனுமதியின் நகல்

இந்த செயல்முறைக்காக நீங்கள் 559 திர்ஹம்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும்.

படி- 5: எமிரேட்ஸ் ஐடி, மருத்துவக் காப்பீடு மற்றும் உடற்தகுதி சோதனைக்காக விண்ணப்பித்தல்

அடுத்த படியாக, உடற்தகுதி சோதனை (18 வயதுக்கு மேற்பட்டவர்கள்), எமிரேட்ஸ் ஐடி மற்றும் மருத்துவக் காப்பீட்டிற்காக (துபாய் மற்றும் அபுதாபி விசாவிற்கு கட்டாயம்) விண்ணப்பிக்க வேண்டும்.

படி- 6: விசா ஸ்டாம்ப் பெறுதல் (Visa Stamping)

பின்னர், விசா ஸ்டாம்பினை பெறுவதற்காக நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த செயல்முறையினையும் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். இதற்கு கீழ்க்கண்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

  • நுழைவு அனுமதியின் நகல்
  • விசா நிலையினை மாற்றியதன் நகல் (அந்த நபர் அமீரகத்திற்குள்ளேயே இருந்தால்)
  • ஸ்பான்சரின் பாஸ்போர்ட் மற்றும் விசா நகல்
  • இஜாரி அல்லது குத்தஹை ஒப்பந்தத்தின் நகல்
  • இரு நாடுகளிலும் சான்றளிக்கப்பட்ட திருமண சான்றிதழின் நகல்
  • தகுந்த மொழிபெயர்ப்புடன் கூடிய திருமண சான்றிதழின் நகல்
    பிறப்பு சான்றிதழின் நகல்
  • தகுந்த மொழிபெயர்ப்புடன் கூடிய பிறப்பு சான்றிதழின் நகல்
  • விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் நகல்
  • வெள்ளை பின்புறத்துடன் கூடிய ஒரு புகைப்படம்

மேற்குறிப்பிட்ட அனைத்தையும் பதிவேற்றம் செய்து விசா ஸ்டாம்பிற்காக 458 திர்ஹம்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு வேளை, அவசர தேவையாக இருந்தால் இமிகிரேஷன் அலுவலகத்திற்கு சென்று அங்கேயே விசா ஸ்டாம்பிங் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக கூடுதலாக 100 திர்ஹம்ஸ் கட்டணமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!