வளைகுடா செய்திகள்

ஓமான்: கடலில் ஏற்பட்ட “சிவப்பு அலை நிகழ்வு”.. கடல் உயிரினங்களை சாப்பிட்டவர்களுக்கு ஃபுட் பாய்சன்..!! MoH எச்சரிக்கை..!!

ஓமான் நாட்டில் உள்ள தோஃபர் கவர்னரேட் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பலருக்கும் ஃபுட் பாய்சன் ஏற்பட்டு அந்த பகுதிகளில் இருக்கும் மருத்துவமனை மற்றும் சுகாதார மையங்களில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகங்கள் மூலம் செய்திகள் வெளிவந்துள்ளது. தோஃபர் கவர்னரேட் பகுதியிலுள்ள கடற்பகுதிகளில் ஏற்பட்ட சிவப்பு அலை நிகழ்வால் (red tide phenomenon) பாதிக்கப்பட்ட மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை உண்டதன் மூலம் பலருக்கும் இந்த ஃபுட் பாய்சன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஓமான் நாட்டின் சுகாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

சுகாதார அமைச்சகம் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், “தோஃபர் கவர்னரேட்டில் உள்ள பல சுகாதார நிறுவனங்கள் சிவப்பு அலை நிகழ்வு காரணமாக கடற்கரைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், நச்சுத்தன்மை பரவிய மீன்கள் மற்றும் கடல் உயிரினங்களை உட்கொண்டதன் விளைவாக பலருக்கும் உடற்கோளாறு ஏற்பட்டிருப்பதாக பதிவு செய்துள்ளன”.

“இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்ட நபர் வாந்தி, வயிற்றுப்போக்கு, நரம்பு மண்டலம் தொடர்பான உணர்வின்மை, பலவீனமான இயக்கம் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்படலாம்” என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

எனவே, சிவப்பு அலைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை சாப்பிடுவதைத் தவிர்க்குமாறு மீனவர்கள் மற்றும் பொதுமக்களை சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் நச்சுத்தன்மையை தவிர்ப்பதற்காக சிவப்பு அலை நிகழ்வால் பாதிக்கப்படுவதாக சந்தேகிக்கப்படும் பகுதிகளிலிருந்து அப்பகுதியில் வசிப்பவர்கள் விலகி இருக்கவும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!