அமீரக சட்டங்கள்

உங்கள் குடும்பத்தை அமீரகத்திற்கு ரெசிடென்ஸி விசாவில் எடுக்க வேண்டுமா..?? ஸ்பான்சர் செய்வதற்கான நிபந்தனைகள் என்ன..??

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்துக் கொண்டோ தொழில் புரிந்து கொண்டோ வசித்து வரும் நீங்கள் உங்களது குடும்பத்தையும் அமீரகத்திற்கு அழைத்து வந்து ரெசிடென்ஸ் விசாவில் வசிப்பதற்கு திட்டமிட்டால், உங்களைச் சார்ந்தவர்களுக்கு ஸ்பான்சர்ஷிப் அளிக்க உங்களுக்கு விருப்பம் உள்ளது.

இதன் அடிப்படையில் உங்கள் ஸ்பான்சர்ஷிப்பின் கீழ் நீங்கள் அவர்களுக்கு ரெசிடென்ஸி விசாவை வழங்க முடியும் என்பதாகும். இருப்பினும் குறிப்பாக நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஸ்பான்சர்ஷிப் செய்யும் போது, ​​மகன் அல்லது மகளுக்கு ஸ்பான்சர்ஷிப் செய்வதற்கான அதிகபட்ச வயது வரம்பு அல்லது நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டிய குறைந்தபட்ச சம்பளத் தேவைகள் ஆகியவை விசா பெறுவதற்கான தகுதிகளில் அடங்கும்.  இது போன்ற எண்ணத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஸ்பான்சர்ஷிப் செய்வதற்கான அனைத்துத் தேவைகள் குறித்த விபரங்களையும் தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த பதிவில் நீங்கள் காணலாம்.

மகளுக்கு ஸ்பான்சர்ஷிப் செய்தல்

ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான u.ae இன் படி, ஒரு வெளிநாட்டவர் தனது மகள் திருமணமாகாதவராக இருந்தால் மட்டுமே ஸ்பான்சர்ஷிப் செய்ய முடியும் என குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் மகளின் வயது குறித்து எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. அதாவது ஸ்பான்சர் செய்யக்கூடிய மகளின் வயது எவ்வித வரம்பும் இன்றி திருமணமாகாதவரை நீங்கள் ஸ்பான்சர் செய்து கொள்ளலாம்.

மகனுக்கு ஸ்பான்சர்ஷிப் செய்தல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர் தனது மகனுக்கு 25 வயது வரை ஸ்பான்சர் செய்யலாம். ஸ்பான்சர் செய்யப்பட்ட மகன் மாற்றுத்திறனாளியாக இருந்தால், பெற்றோர் அவருக்கு எந்த வயதிலும் ஸ்பான்சர் செய்யலாம்.

பிறந்த குழந்தைகளுக்கு ஸ்பான்சர்ஷிப் செய்தல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்த குழந்தைகளுக்கு, அபராதம் பெறுவதைத் தவிர்க்க, பிறந்த 120 நாட்களுக்குள் ரெசிடென்ஸ் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

வளர்ப்புப் பிள்ளைகளுக்கு ஸ்பான்சர்ஷிப் செய்தல்

அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டவர் தனது மாற்றாந்தாய் அல்லது வளர்ப்புப் பிள்ளைகளுக்கும் ஸ்பான்சர் செய்யலாம். இதற்கு ரெசிடென்ஸ் மற்றும் வெளிநாட்டவர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகத்தின் (GDRFA) நிபந்தனைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும். இதில், ஒவ்வொரு குழந்தைக்கும் வைப்புத்தொகை (deposit) மற்றும் Biological Parent என்ற உயிரியல் பெற்றோரிடமிருந்து எழுதப்பட்ட தடையில்லா சான்றிதழ் (NOC) ஆகியவை அடங்கும். மேலும் அவர்களின் குடியிருப்பு விசாக்கள் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் மற்றும் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

சம்பள தகுதி

மனைவி, குழந்தைகள் என குடும்ப உறுப்பினருக்கு ஸ்பான்சர் செய்வதற்கு குறைந்தபட்ச சம்பளம் மாதத்திற்கு 4,000 திர்ஹம் ஆகும்..

இருப்பினும், உங்களுக்கு நிறுவனம் தங்குமிட வசதிகளை வழங்கியிருந்தால், சம்பளத் தேவை 3,500 திர்ஹம்களாக குறையும். இமிகிரேஷன் அதிகாரிகளுக்கு தங்குமிடத்திற்கான சான்றாக, சான்றளிக்கப்பட்ட வாடகை ஒப்பந்தத்தை (tenancy contract) நீங்கள் வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஸ்பான்சர்ஷிப் செய்வதற்கான முக்கிய ஆவணங்கள்

• குழந்தையின் பாஸ்போர்ட் நகல்.

• உங்கள் அசல் பாஸ்போர்ட் நகல் மற்றும் எமிரேட்ஸ் ஐடி

• உங்களின் சம்பளச் சான்றிதழ்.

• துபாய் குடியிருப்பாளர்களுக்கான Ejari அல்லது பிற எமிரேட்ஸிற்கான பதிவு செய்யப்பட்ட வாடகை ஒப்பந்தம் (tenancy contract).

• சான்றளிக்கப்பட்ட திருமணச் சான்றிதழ்.

• குழந்தையின் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்

குழந்தைகளுக்கு ஸ்பான்சர்ஷிப் செய்யும் பெண்கள்

அமீரகத்தில் வசிக்கும் வெளிநாட்டு பெண் தனது குழந்தைகளுக்கு ஸ்பான்சர்ஷிப் செய்ய விரும்பினால், மேலும் சில கூடுதல் ஆவணங்களை வழங்க வேண்டும். முதலில், அவர்கள் தங்களின் கணவரிடமிருந்து தடையில்லாச் சான்றிதழை (NOC) வழங்க வேண்டும். ஆவணம் அரபு மொழியில் இருக்க வேண்டும் மற்றும் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

கணவர் அமீரகத்தில் இருந்தால், NOC ஐக்கிய அரபு அமீரக நீதிமன்றம் அல்லது நோட்டரி பப்ளிக் மூலம் சான்றளிக்கப்பட வேண்டும். கணவர் அமீரகத்தில் இல்லாமல் வேறு நாட்டில் இருந்தால், NOC சொந்த நாட்டில் உள்ள அமீரக தூதரகத்தால் சான்றளிக்கப்பட வேண்டும். NOC அரபு அல்லாத வேறு மொழியில் டைப்பிங் செய்யப்பட்டால், அது அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

சிங்கிள் மதர்

சிங்கிள் பேரண்டாக இருக்கும் ஒரு தாய், தனது குழந்தையின் விசாவிற்கு ஸ்பான்சர்ஷிப் செய்ய விரும்பினால் ஐக்கிய அரபு அமீரக நீதிமன்றத்தின் தீர்ப்பையோ (a verdict from a UAE court granting her custody) அல்லது உள்ளூர் ஐக்கிய அரபு அமீரக அதிகாரியிடமிருந்து ஒரு சான்றிதழையோ அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனது சொந்த நாட்டுத் தூதரகத்திலிருந்து ஒரு பிரமாணப் (affidavit) பத்திரத்தையோ சமர்ப்பிக்க வேண்டும்.

உங்கள் நாட்டிலிருந்து சான்றிதழ் வழங்கப்பட்டால், உங்கள் சொந்த நாட்டில் உள்ள ஐக்கிய அரபு அமீரகம் தூதரகம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வெளியுறவு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் (MoFAIC) சான்றளிக்க வேண்டும். அரேபிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களையும் நீங்கள் பெற வேண்டும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!