வளைகுடா செய்திகள்

நாட்டில் நிலவும் கடும் வெப்பம்.. தொழிலாளர்களுக்கு ஜூலை முதல் 4 மணி நேர ‘மதிய வேலை இடைவேளை’.. அறிவிப்பை வெளியிட்ட பஹ்ரைன் அரசு..!!

வளைகுடா நாடுகளில் இது கோடை காலம் என்பதால் பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. எனவே தொழிலாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு அனைத்து நாடுகளும் மதிய நேரங்களில் வெளிப்புறம் வேலை செய்ய தடை விதித்துள்ளது. தற்போது பஹ்ரைன் அரசும் தனது நாட்டில் மதிய நேர வேலை இடைவேளை அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது.

அதன்படி, நேரடி சூரிய ஒளியில் மற்றும் திறந்த இடங்களில் வேலை செய்ய மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை என நான்கு மணி நேரம் மதிய நேர வேலைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடையானது ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைமுறையில் இருக்கும் என்றும் தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொழிலாளர்களை வெப்பத்தின் பிடியிலிருந்து பாதுகாப்பது, வெப்பத்தின் காரணமாக பல்வேறு நோய்கள் வராமல் தடுப்பது, வெப்ப அழுத்தம் ஏற்படாமல் தடுப்பது மற்றும் வெப்பம் காரணமாக ஏற்படும் தொழில் விபத்துகளை குறைப்பது ஆகியவை இந்த திட்டத்தின் நோக்கம் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனவே, அரசின் இந்த திட்டத்திற்கு அனைத்து முதலாளிகள் மற்றும் தொழிலாளிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது. அத்துடன், தொழிலாளர்களின் பாதுகாப்பு, வெப்பத்தினால் ஏற்படும் ஆரோக்கியப் பிரச்சினை, வெப்பநிலை தாக்கம் குறித்த அறிவுறுத்தல்கள் அடங்கிய நோட்டீஸ்கள், பழமொழிகளில் துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றையும் தொழிலாளர்களிடையே விநியோகித்தது.

தொழிலாளர் துறை அமைச்சர் ஜமீல் பின் முகமது அலி ஹுமைதான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்வதில் பஹ்ரைன் முன்னணியில் இருப்பதாகவும், பல்வேறு உற்பத்தித் தளங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த மதிய நேர தடையானது அமல்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டுகளில் தனியார் துறையை சேர்ந்த நிறுவனங்கள் கோடை கால தடைக்கு ஒத்துழைப்பு அளித்ததை அமைச்சர் பாராட்டினார். இந்த செயலானது ஊழியர்களுக்கு பாதுகாப்பான மற்றும் கண்ணியமான பணிச்சூழலை உறுதி செய்வதில் முதலாளிகளின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும் இந்த திட்டத்தினால் நிறுவனங்களின் பணிகள் பாதிக்கப்படா வண்ணம் வேலை நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்த சட்டத்தினை மீறுபவர்களுக்கு, பஹ்ரைன் தொழிலாளர் சட்டத்தை பிரகடனப்படுத்தும் 2012 இன் 36 சட்டத்தின் பிரிவு (192) இன் கீழ், மூன்று மாதங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை மற்றும்/அல்லது BD1,000 ($2.652) வரையிலான அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!