வளைகுடா செய்திகள்

சவுதி அரேபியாவில் தனியார் துறை ஊழியர்களுக்கு புதிய விதிமுறைகளை வெளியிட்ட மனிதவள அமைச்சகம்..!!

சவுதி அரேபியாவின் தொழிலாளர் சந்தையினை மேம்படுத்தும் பொருட்டு, தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதிய சில விதிமுறைகள் மனிதவள அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்டுள்ளன.

அதன்படி, தனியார் துறை நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்கள், வேலையினை விட்டுச் செல்லும் பொழுது பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகளை சவூதி மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறைகளின் வாயிலாக, தொழிலாளர்களுக்கும், முதலாளிகளுக்கும் இடையிலான ஒப்பந்த உறவை மேம்படுத்துதல், இரு தரப்பினரின் ஒப்பந்த உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் நாட்டில் தொழிலாளர் சந்தையின் நெகிழ்வுத்தன்மையை அதிகப்படுத்துதல் போன்ற நன்மைகளை அடைய முடியும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மனிதவள அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்டுள்ள தொழிலாளர்கள் பணி நிறுத்தம் சம்பந்தமான அரசின் புதிய நடவடிக்கைகள் பின்வருமாறு புதுப்பிக்கப்பட்டுள்ளன.

தொழிலாளியின் நடத்தை காரணமாக அவருடன் வேலை வாய்ப்பு ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ள முதலாளி விரும்பினால் அது தொடர்பாக அமைச்சகத்துக்கு கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்டவுடன் தொழிலாளி சம்பந்தப்பட்ட தகவல்கள் அமைச்சகத்துடன் இணைக்கப்படும்.

மேலும், அமைச்சகத்தின் நெட்வொர்க் அமைப்பில் அந்த தொழிலாளியின் நிலை வேலையிழந்தவர் என மாற்றப்படும். எனினும், அடுத்த 60 நாட்களுக்குள் வேறு ஒரு முதலாளியின் கீழ் வேலை பெறுவதற்கு அந்த தொழிலாளிக்கு உரிமை உண்டு. அவ்வாறு வேலையில் சேராவிட்டால் ஒப்பந்ததை நிறுத்தி விட்டு தனது சொந்த நாட்டுக்கு அவர் திரும்பிச் செல்லலாம்.

60 நாட்களை கடந்தும் அந்த தொழிலாளி மேற்கூறிய இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்காமல் இருந்தால், அவரின் நிலை அமைச்சகத்தின் அனைத்து நெட்வொர்க் அமைப்பிலும் ஆப்சென்ட் ஆக கருதப்படுவார்.

ஒருவேளை இந்த புதிய அறிவிப்பு வெளியான தேதிக்கு முன்னர் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்பட்டால், முதலாளிகள் தங்களது சேவைகளை பயன்படுத்தி தொழிலாளர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளலாம். அப்படி எடுக்கும் பட்சத்தில் தொழிலாளர்களுக்கு ஒப்பந்தம் அளிக்கும் போது தாமத கட்டணம் வசூலிக்கப்படும்.

அதன் பின் தொழிலாளியின் ஒப்புதலுடன், புதிய வேலை ஒப்பந்தமானது மற்றொரு முதலாளியின் கீழ் வழங்கப்படும். அதே நேரம், வெளிநாட்டுத் தொழிலாளியின் பணியிடமாற்றம் அமைச்சின் ஒப்புதலின் தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் முடிக்கப்படாவிட்டால், வெளிநாட்டவரின் நிலை மீண்டும் ஆப்சென்ட் என்று அறிவிக்கப்படும்.

இந்த புதிய தொழிலாளர் சட்டமானது தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் ஆகிய இருவரின் உரிமைகளை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சி என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஒரு தொழிலாளர் வேலை இல்லாத நிலையினை எட்டும் பொழுது, அமைச்சகம் கொடுக்கும் காலக்கெடுவினை உபயோகித்து வேறு வேலைக்கான ஒப்பந்தத்தினை தொழிலாளி எளிதாக பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!