வளைகுடா செய்திகள்

தொழிலாளர்கள் விடுமுறை பெறுவது குறித்த புதிய சட்டங்கள்..!! தொழிலாளர்களுக்கான சட்டத்தை புதுப்பித்து வெளியிட்ட ஓமான்…

ஓமான் நாட்டின் தொழிலாளர்களுக்கான சட்ட ஆணைகள் மாண்புமிகு சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்களால் மாற்றியமைக்கப்பட்டு புதிய தொழிலாளர் சட்டம் வெளியிடப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் விடுமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த ஆணையானது ஓமான் விஷன் 2040 இன் அடிப்படைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் பல விதிகள் புகுத்தப்பட்டுள்ளன. அதில் தொழிலாளர் விடுமுறைகள் குறித்த விபரங்கள் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளன.

ஆர்டிகிள் (77)

தொழிலாளர்களுக்கு வாரம் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு மிகாமல் ஊதியத்துடன் ஓய்வு எடுக்க அவர்களுக்கு உரிமை உண்டு. எக்காரணத்தைக் கொண்டும் தொழிலாளர்களுக்கான வாராந்திர ஓய்வு நாட்களுக்கான உரிமையை பறிக்கக் கூடாது.

ஆர்டிகிள் (78)

தொழிலாளிக்கு (30) முப்பது நாட்களுக்குக் குறையாத ஊதியத்துடன் கூடிய வருடாந்திர விடுப்புக்கு உரிமை உண்டு. அவர் வேலையின் அமைப்புக்கு ஏற்ப வருடத்திற்குள் எந்த மாதம் வேண்டுமானாலும் முதலாளியின் அனுமதியுடன் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் வேலைக்கு சேர்ந்த ஆறு மாதத்திற்குப் முன்பு விடுப்பை எடுக்க கூடாது.

முதலாளியுடன் வேலைக்குச் சேர்ந்த தேதியிலிருந்து, தொழிலாளி வேலையின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக விடுமுறை எடுக்க தவறினால் விடுப்பின் மீதியை (30) முப்பது நாட்களுக்கு மிகாமல் வைத்திருக்க உரிமை உண்டு.

முதலாளி மற்றும் தொழிலாளி ஆகிய இரு தரப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி தொழிலாளியின் வருடாந்திர விடுமுறைகள் கணக்கிடப்படலாம், மேலும் ஓமானியல்லாத தொழிலாளி தனது தாய் நாட்டிற்கு திரும்புவதற்கான விமான டிக்கெட்டைப் பெறுவதற்கு ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட விடுமுறையை கழித்த பின்னர் தனது பணியிடத்திற்குத் திரும்புவதற்கு உரிமையுண்டு.

எல்லா சந்தர்ப்பங்களிலும், தொழிலாளி தனது வருடாந்திர விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அமைச்சரால் அறிவிக்கப்பட்ட சில முக்கியமான அரசாங்கம் சார்ந்த துறைகளில் பணிகள் மேற்கொள்ளப்படும் பொழுது அந்த பணிகளை முடித்துக் கொண்டு தொழிலாளி தனக்கு விருப்பப்பட்ட மற்றொரு காலத்தில் வருட விடுமுறையை மாற்றிக் கொள்ளலாம்.

ஆர்டிகிள் (79)

சட்டப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்ட உத்தியோகபூர்வ விடுமுறை நாட்களில் தொழிலாளி தனது விரிவான ஊதியத்திற்கு உரிமையுடையவர் ஆவார்.

ஆர்டிகிள் (80)

தொழிலாளி குறிப்பிட்ட சில அவசர காரணங்களுக்காக சம்பளம் இல்லாத விடுப்பு எடுக்க விரும்பினால் முதலாளியின் அனுமதியின் கீழ் அவர் அதனை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அந்த குறிப்பிட்ட காலத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய நிதி பங்களிப்புகளான தொழிலாளர் பங்கு, முதலாளியின் பங்கு மற்றும் விடுப்பு காலத்தில் அரசின் சமூக பாதுகாப்பு நிதிக்கான பங்குகளுக்கான அனைத்து நிதியினையும் தொழிலாளர் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் முதலாளி விடுப்பினை வழங்கலாம்.

ஆர்டிகிள் (81)

வேலைகளின் தன்மைகளுக்கு ஏற்ப விடுமுறைகளை பிரித்து எடுத்துக் கொள்ள தொழிலாளிக்கு உரிமை உண்டு.

வேலையின் காரணமாக, பணியாளரின் வருடாந்திர விடுப்பை முதலாளி ஒத்திவைக்கலாம், ஆனால் ஒத்திவைப்பானது ஆறு மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தொழிலாளி குறைந்தபட்சம் ஒவ்வொரு (2) வருடத்திற்கும் ஒருமுறை முப்பது நாட்களுக்கு குறையாத காலத்திற்கு விடுப்பு எடுக்க வேண்டும்.

தொழிலாளி எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டால், அவர் எடுக்காத வருடாந்திர விடுமுறை நாட்களுக்கான அடிப்படை ஊதியத்தை முதலாளி வழங்கலாம்.

தொழிலாளி தனது சேவை முடிவடைவதற்குள் வெளியேறும் பட்சத்தில் அவரது வருடாந்திர விடுப்பு இருப்புக்கான விரிவான ஊதியத்தை கோர அவருக்கு உரிமை உண்டு.

ஆர்டிகிள் (82)

தொழிலாளி நோய்வாய்ப்படும்பொழுது அவருக்கு கிடைக்கும் ஊதியம் பின்வருமாறு இருக்கும். இதன்படி, ஊதியத்தின் பின்வரும் சதவீதங்களின் அடிப்படையில், வருடத்திற்கு நூற்றி எண்பத்தி இரண்டு நாட்களுக்கு மிகாமல் (182) நோய்வாய்ப்பட்ட விடுப்புக்கு உரிமை உண்டு:

1. நோயின் முதல் (1) நாளிலிருந்து இருபத்தியோராம் (21) நாள் வரை: (100%) ஊதியத்தில் நூறு சதவீதம்.

2. இருபத்தி இரண்டாவது (22) நாள் முதல் முப்பத்தைந்தாவது (35) நாள் வரை: (75%) ஊதியத்தில் எழுபத்தைந்து சதவீதம்.

3. முப்பத்தி ஆறாவது (36) நாள் முதல் எழுபதாம் (70வது) நாள் வரை: (50%) ஊதியத்தில் ஐம்பது சதவீதம்.

4. எழுபத்தோராம் (71) நாள் முதல் நூற்றி எண்பத்தி இரண்டாம் நாள் வரை (182): (35%) முப்பத்தைந்து சதவீதம் ஊதியம்.

மேலும், கீழ்க்கண்டவாறு விரிவான ஊதியத்துடன் கூடிய சிறப்பு விடுப்புக்கு தொழிலாளிக்கு உரிமை உண்டு:

>>  ஏழு நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். மேலும், குழந்தை பிறந்த நாளிலிருந்து 98 நாட்களுக்கு மேல் விடுப்பு எடுக்க அனுமதி இல்லை.

>> திருமணத்திற்காக மூன்று நாள் விடுப்பிற்கு அனுமதி உண்டு.

>> தந்தை, தாய், தாத்தா, பாட்டி, சகோதரன் அல்லது சகோதரி இறந்தால் மூன்று நாட்கள்.

>> மாமா அல்லது அத்தை இறந்தால் இரண்டு நாட்கள்.

>> மனைவி அல்லது மகன்கள் அல்லது மகள்களில் ஒருவர் இறந்தால் பத்து நாட்கள்.

>> தன் மொத்த வேலை காலத்தில் 15 நாட்கள் ஹஜ் முதலிய புனித பயணத்திற்கு செல்ல அனுமதி உண்டு. ஆனால் ஒரு வருடம் தொழிலாளி நிறுவனத்தில் வேலை பார்த்திருக்க வேண்டும்.

>> பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் அல்லது பல்கலைக் கழகங்களில் படிப்பில் சேரும் ஓமானி தொழிலாளிக்கு, பரீட்சைக்காக ஆண்டுக்கு அதிகபட்சம் 15 நாட்கள் விடுமுறை எடுக்க அனுமதி உண்டு.

>> ஒரு முஸ்லிம் தொழிலாளிக்கு அவரது கணவர் இறந்தால் 130 நாட்கள், மற்றும் முஸ்லிமல்லாத பெண்ணுக்கு பதினான்கு நாட்கள்.

>> தொழிலாளியின் கணவரோ, மனைவியோ அல்லது அவருக்கு நெருக்கமான உறவினை கொண்டவர்கள் நோயால் பாதித்தால் 15 நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.

>> பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய காலத்தை ஈடுகட்ட தொழிலாளிக்கு 98 நாட்கள் மகப்பேறு விடுப்பு.

>> தகுதிவாய்ந்த மருத்துவ அதிகாரியின் பரிந்துரையின் பேரில், மகப்பேறுக்கு முந்திய காலத்தை ஈடுசெய்ய தொழிலாளிக்கு விடுப்பு வழங்கப்படும், அதன் காலம் (14) பதினான்கு நாட்களுக்கு மிகாமல் இருந்தால், மீதமுள்ள இந்த விடுப்புக் காலம் பிறந்த தேதியிலிருந்து வழங்கப்படும்.

இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமங்களை வழங்க, அதற்குரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட தொழிலாளிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!