வளைகுடா செய்திகள்

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு… விளைவுகளை சந்திக்கும் குவைத்.. அரசு நடவடிக்கையின் எதிரொலி..

வெளிநாட்டினர் அதிகம் பணிபுரியும் வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் சமீப காலமாக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது.  பல்வேறு துறைகளில் குவைத் பற்றாக்குறையை சந்தித்து வந்தாலும், குறிப்பாக தொழில் வல்லுநர்கள் மற்றும் கைவினைஞர்களின் கடுமையான பற்றாக்குறையை அனுபவித்து வருகிறது.

இதன் காரணமாக தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் வெளிநாட்டு தொழிலாளர்களின் தேவை அதிகரித்து வருவதாக அல் ஜரிடா செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, பல்லாயிரக்கணக்கான தனியார் மற்றும் பொதுத் துறைகளில் உள்ள வெளிநாட்டினர் நிரந்தரமாகவோ அல்லது தன்னார்வமாகவோ நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் கொரோனா தாக்கத்தினால் குவைத்தை விட்டு வெளியேறியவர்களின் பலரது விசாக்கள் காலாவதியாகி குவைத் திரும்ப முடியாமலும் உள்ளனர்.

60 மற்றும் அதற்கு மேற்பட்ட பல்கலைக்கழக பட்டம் பெறாத வெளிநாட்டவர்கள் 750 தினார்களை ஆண்டுக் கட்டணமாகச் (வேலை அனுமதியைப் புதுப்பிப்பதற்கு 250, இன்சூரன்ஸ் பாலிசிக்கு 500) செலுத்தி தங்களுடைய ரெசிடென்ஸியை புதுப்பிக்க சமீபத்தில் அனுமதி அளித்திருந்தாலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 7,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குவைத்தை விட்டு வெளியேறியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது நேரடியாக வணிக சந்தையை பாதித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு சில ஆண்டுகளாக குவைத் அரசானது வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைக்க எடுத்த நடவடிக்கையே இந்த வெளிநாட்டு தொழிலாளர் பற்றாக்குறைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

குவைத்தின் மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் குவைத் குடிமக்களும் 70 சதவீதம் வெளிநாட்டவரும் இருந்து வந்த நிலையில் இதனை 70 சதவீதம் குவைத் குடிமக்களும் 30 சதவீதம் வெளிநாட்டவர் என்ற நிலைக்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.

அரசுதுறைகளில் வெளிநாட்டவருக்கு பதில் குடிமக்களையே பணிக்கு அமர்த்துதல், மருத்துவர், ஆசிரியர் உள்ளிட்ட பல துறைகளில் நாட்டு மக்களையே வேலைக்கு அனுப்புதல் ஆகியவை இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!