வளைகுடா செய்திகள்

செக்யூரிட்டி நிறுவனத்தில் வெளிநாட்டவர்கள் பணிபுரிந்தால் 50,000 ரியால்கள் அபராதம்..!! சவுதியின் பொது வழக்கு துறை எச்சரிக்கை..!!

சவூதி அரேபியாவில் உள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனங்களை நிர்வகிக்கும் அனைத்து ஊழியர்களும் சவுதி நாட்டின் குடிமக்களாகவே இருக்க வேண்டும் என்று அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. வருடாந்திர ஹஜ் சடங்குகளை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியாவில் கூடும் யாத்ரீகர்களின் குடியிருப்புகளின் பாதுகாப்பு காவலர்களுக்கும் இந்த நிபந்தனை பொருந்தும் எனவும் அறிவித்துள்ளது.

இந்த விதிகளை கடைபிடிக்காத பட்சத்தில் உரிமம் பெற்ற நிறுவனங்கள் முதலில் எச்சிரிக்கப்படும் என்றும், அதன் பின்னர் அதிகபட்ச அபராதமான SR50,000 கட்டணமாக விதிக்கப்படும் என்றும் சவுதி அரசு தெரிவித்துள்ளது. அதை மீறியும் தொடர்ந்தால் விதி மீறலில் ஈடுபட்ட மையமானது மூடப்பட்டு அதன் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா நாடானது தற்பொழுது 32.2 மில்லியன் மக்கள் தொகையினை கொண்டுள்ள மிகப்பெரிய அரபு நாடாகும். இதில் வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். இதற்கிடையில் சமீப காலமாகவே, “சவூதிமயமாக்கல்” எனப்படும் தொழிலாளர் கொள்கையின் ஒரு பகுதியாக, கல்வி, தொலைத்தொடர்பு மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளில் சவுதி அரேபியா நாட்டினைச் சேர்ந்த மக்கள் தான் பணியில் அமர்த்தப்பட வேண்டும் என தொடர் முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.

இதன் காரணமாக, பல வெளிநாட்டு ஊழியர்கள் அவர்கள் பணிபுரிந்த துறைகளில் இருந்து நீக்கப்பட்டு சவுதி குடிமக்கள் முக்கியமான பதவிகளில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், சில துறைகளில் உள்ள வேலைகளை சவுதி குடி மக்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டும் என்ற ஆணைகளும் அரசு அதிகாரிகளால் பிறப்பிக்கப்பட்டது

அதில் கஸ்டமர் கேர் சர்வீஸ், பைலட்டுகள்,துணை விமானிகள் மற்றும் விமானக் கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட உரிமம் பெற்ற விமானத் தொழில்கள், விற்பனை நிலையங்கள், கார்களை சோதனை செய்யும் தொழில்கள் போன்ற தொழில்களில் சவுதி நாட்டின் குடிமக்கள் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து கடந்த டிசம்பரில், நாடு முழுவதும் அஞ்சல் சேவைகள் மற்றும் பார்சல் போக்குவரத்துக்கான வேலைவாய்ப்புகளை உள்ளூர்மயமாக்கும் மற்றொரு ஆணை அமலுக்கு வந்தது. மேலும் கடந்த ஜனவரி மாதம் சவுதி அரேபியாவின் மனிதவள அமைச்சகம் புனித நகரமான மதீனாவில் பல தொழில்களை உள்ளூர்மயமாக்க ஆணையிட்டது.

இவ்வாறு சவுதி அரேபியா நாடானது தனது குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு பல வேலைகளில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக சவூதிமயமாக்கல் திட்டத்தை படிப்படியாக அமல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!