வளைகுடா செய்திகள்

இந்தியாவிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திடீரென தீ விபத்து.. பயணிகள் சிலர் காயம்..!!

ஓமானில் இன்று (புதன்கிழமை) காலை மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கொச்சிக்கு செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தீபிடித்து புகை வெளியேறத் தொடங்கியதை அடுத்து விமானம் நிறுத்தப்பட்டு விமானத்தில் இருந்து பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவமானது மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி வெளியிட்ட தகவலில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமானது மஸ்கட்டில் இருந்து கொச்சினுக்கு புறப்பட தயாராகி ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது விமானத்தின் (IX-442) எஞ்சினில் தீ பிடித்து புகை வந்ததை அறிந்த விமானி அவசரமாக விமான இயக்கத்தை நிறுத்தியதாகவும் உடனடியாக பயணிகள் ஸ்லைடுகள் மூலம் வெளியேற்றப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளன. 

இது குறித்து ஓமனின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட ஒரு அறிவிப்பில், “இந்த சம்பவம் தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் கையாளப்படுகிறது. பயணிகள் மற்றும் விமான போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை” என்று கூறியுள்ளது. விமானத்தில் 141 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் இருந்தனர் என்றும் அவசர வெளியேற்றத்தின் போது 14 பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தீவிபத்துக்குள்ளான விமானம் காலை 11:30 மணியளவில் புறப்படவிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!