வளைகுடா செய்திகள்

எவ்வித அபராதமும் இன்றி ஓமானை விட்டு நிரந்தரமாக வெளியேற ஒரு வாரத்திற்குள் 7,689 பேர் பதிவு..!!

ஓமான் நாட்டில் இருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் ஓமானை விட்டு நிரந்தரமாக வெளியேறும் பட்சத்தில் எந்தவொரு அபராதமும் கட்டணமும் இன்றி நவம்பர் 15 முதல் டிசம்பர் 31 வரையிலான நாட்களில் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று ஓமான் தொழிலாளர் அமைச்சகத்தின் சார்பாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டு அவ்வாறு வெளியேற விருப்பும் நபர்கள் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்திட்டம் தொடங்கி ஒரு வாரத்திற்குள்ளாகவே சுமார் 7,689 கோரிக்கைகளை தொழிலாளர் அமைச்சகம் வெளிநாட்டவர்களிடம் இருந்து பெற்றிருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பதிவு செய்த வெளிநாட்டவர்களின், 3263 வெளிநாட்டவர்கள் தங்கள் வேலையை விட்டுவிட்டனர் என்றும், 408 பேருக்கு பணி அனுமதி இல்லை, அவர்களில் 253 பேர் பணி அனுமதி ரத்து செய்யப்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. அதனை தவிர்த்து, மொத்தம் 3,765 பணி அனுமதிகள் மட்டுமே தற்பொழுது செயல்பாட்டில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், 7,689 கோரிக்கைகளில், 93 குடும்ப விசாக்கள், 147 விசிட் விசாக்கள், 12 சுற்றுலா விசாக்கள் மற்றும் 7,289 பணி விசாக்கள் மற்றும் 61 ஆவணங்கள் இல்லாதவர்களிடமிருந்து வந்தவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமானியரல்லாத தொழிலாளர்கள் நிரந்தரமாக நாட்டை விட்டு வெளியேறவும், வேலை அனுமதி காலாவதியாகும் விளைவாக ஏற்படும் அனைத்து கட்டணங்கள் மற்றும் அபராதங்களிலிருந்து நிறுவனங்களுக்கு விலக்கு அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பணி அனுமதி காலாவதியானவர்கள் அல்லது சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்கள் என பதிவு செய்யப்பட்ட குடியிருப்பாளர்கள் இந்த காலகட்டத்தில் புறப்படுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பதிவு செய்ய விரும்புபவர்கள் தங்கள் நாட்டு தூதரகங்கள், அமைச்சகத்தின் வலைத்தளம் மற்றும் சனத் மையங்களில் பதிவு செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் பதிவுசெய்த ஏழு நாட்களுக்குப் பிறகு அல்லது விமானம் புறப்படுவதற்கு ஏழு மணி நேரத்திற்கு முன், வெளிநாட்டு தொழிலாளி மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள தொழிலாளர் அமைச்சக அலுவலகத்திற்கு செல்லலாம் என்றும், அவர்கள் செல்லுபடியாகும் பயண டிக்கெட், பயண ஆவணங்கள் மற்றும் 72 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட PCR சோதனை முடிவை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டவர்களுக்கு முறையான ஆவணங்கள் இல்லை என்றால் (இழந்த அல்லது காலாவதியான பாஸ்போர்ட் போன்றவை) அவர்கள் தங்கள் நாட்டு தூதரகங்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும் என்பதும் தொழிலாளர் அமைச்சின் வலைத்தளமான mol.gov.om இல் ஓமானை விட்டு வெளியேற விரும்பும் வெளிநாட்டவர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!